புது உலகத்திற்கு கூட்டிப் போவதாகச் சொல்லித்தான் துருவ நட்சத்திரத்தை ஆரம்பித்தார் இயக்குநர் கௌதம் மேனன். `காக்க காக்க’ படமே விக்ரம் தான் செய்திருக்க வேண்டியது. நடுவில் தான் அது கை மாறி சூர்யா வசம் போனது.
நாட்டுக்காக தங்களுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டு வேலை பார்க்கிற பத்துப் பேரின் உலகத்தில் ரசிகர்களை அழைத்துப் போகிற பயணம் தான் இந்தப் படம். துருக்கி, ஜார்ஜியா, ஸ்லோவேனியா என இதுவரை யாரும் செல்லாத இடங்களுக்கும் சென்று படமாக்கியிருந்தார். 2016ன் கடைசியில் ஆரம்பிக்கப்பட்ட படம். இப்போதுதான் அதற்கு உயிர் வந்திருக்கு. முக்கால்வாசி படம் ஏற்கெனவே முடிந்துவிட்டது. பத்து நாட்கள் ஷுட்டிங்கிற்காக கால்ஷீட் என காத்திருந்தபோதுதான் நிறைய பிரச்சனைகள். ஓவர் பட்ஜெட் ஆகிவிட்டது என்றார்கள்.
பெரிய யூனிட்டை நிறைய நாடுகளுக்குக் கூட்டிக்கொண்டு போய் அதிகப்படியான நாட்கள் தங்கியிருந்தது என செலவு அதிகமானது. தயாரிப்பாளரிடமிருந்து first copy அடிப்படையில் தயாரித்தார் கௌதம். படத்தின் பிரமாண்டத்திற்காகவும், சண்டைக்காட்சிகளின் வித்தியாசத்தன்மைக்காகவும், படத்தின் கூர்மைக்காகவும் நல்லபடியாக தாராளமாக செலவு செய்தார். ஆனால் செலவு கைமீறிப் போய்விட்டது. படத்தை முடித்துக் கொடுக்கும் வேலையில் பணத்தேவைக்கு சிரமம் ஆகிவிட்டது. அந்த சமயம் கொரோனா காலம் தொடங்கிவிட்டது. இயக்குநரால் பணத்தைப் புரட்ட முடியாமலும், நடிகர்கள் வேறு படங்களுக்கும் சென்று விட்டதால் அப்படியே நின்றது.
கொரோனா முடிந்த பின்பும் கௌதம் மேனன் வேண்டிய ஏற்பாடுகளை செய்து அடுத்த மீதியிருந்த படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. நீளமாக வளர்த்திருந்த தாடியையும், மீசையையும் வேறு படங்களுக்காக எடுக்க வேண்டியிருந்தது. அந்த வேளையில் தான் கௌதம் நடிக்க வந்தார். சினிமாவில் அவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தொடர்ந்து நடித்து அதில் கிடைக்கிற பணத்தை எல்லாம் படத்தில் போட்டு மீதியிருந்த சிறிய படப்பிடிப்புகளை நிறைவு செய்தார். ப்ரீ புரொடக்ஷன்களையும் முடித்தார்.
அதற்குப் பிறகு ஐசரி கணேஷ் படத்தை முடிக்கவும் இறுதிக்கட்ட பணிகளுக்கு வேண்டிய பணத்தையும் கொடுத்தார். அதற்காகவே வெந்து தணிந்தது காடு படத்தையும் உடனடியாக கௌதம் மேனன் முடித்துக் கொடுத்தார். ஐசரி கணேஷ் சமயத்தில் செய்த உதவியினால் மட்டுமே இப்போது துருவ நட்சத்திரம் திரை தொட தயார் ஆகிவிட்டது. இந்தப்படம் வெளிவருவது விக்ரமுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்திவிட்டது. விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருவதாக உறுதி அளித்து விட்டாராம்.
படம் ஆக்சனிலும் பாடல்களிலும் பெரிய கவனம் பெறுமாம். நிச்சயமாக இளைஞர்களை குறிவைத்திருக்கிறார்கள். முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இருவர் பெயரை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காட்சிகள் நீளம் காரணமாக படத்தில் இருக்காது என்கிறார்கள். U/A சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள்.
தாமதம் ஆனாலும் துருவ நட்சத்திரம் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள். இவ்வளவு காலம் தாமதித்து வந்தாலும் நிச்சய வெற்றி என சினிமா உலகிலும் பேச்சு தாராளமாக பரவி இருக்கிறது. அதனால்தான் நடித்து சம்பாதித்த காசையெல்லாம் போட்டு படத்தை வெளியே அனுப்புகிறார் கௌதம் மேனன். தமிழ் சினிமா விசேஷமானது. எப்போதுமே ஆச்சர்யம் அளிப்பது தான் அதன் முதல் பணி.