சென்னை லயோலா கல்லூரியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று (23.9.2023) நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய நடிகர் கமல், கல்வி, அரசியல், சினிமா என பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியிருந்தார். அதில் மணிப்பூர் மாணவர்களின் கல்வி குறித்துப் பேசிய கமல், “மணிப்பூரில் இருப்பது விளையாட்டுக் களமல்ல, போர்க்களம். அங்கு கல்வி, கலை, விளையாட்டு போன்றவற்றிற்கு மிகுந்த நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அவை நடப்பதற்கான வாய்ப்புகளும் இப்போது இல்லை.
மணிப்பூர் மாணவர்களுக்கு இங்கு இருக்கும் கல்வி நிறுவனங்கள் உதவ வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை சார்ந்த மணிப்பூர் மாணவர்களுக்கு உதவி செய்து பயிற்சி அளித்து வருகிறார். அதற்கு அடுத்தக் கட்டமாக அவரது தந்தையான முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நின்று, மணிப்பூர் மாணவர்கள் இங்கு வந்து படிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கேரள முதல்வர் பினராயி விஜயன் அதைச் செய்து வருகிறார்.
மணிப்பூரில்தானே நடக்கிறது, நமக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்று நினைக்க வேண்டாம். திராவிடம் நாடு தழுவியது. ராஜஸ்தான் பாலைவனம் வரை நாம் பரவி வாழ்ந்துள்ளோம். இது நம் வரலாறு. ஹரப்பா, மொகெஞ்சதாரோ மற்றும் கீழடி பற்றி அறிந்தால் நான் சொல்வது புரியும். மணிப்பூர் மாணவர்களுக்கு உதவி செய்வதும் திராடவிட மாடலின் ஒருபகுதிதான். 2000 வருடமாக இருக்கும் இந்தத் திராவிட மாடல் எங்களுடையது” என்று கூறினார்.
மாணவர்களுக்கிடையான கேள்வி-பதில் உரையாடலின் போது மன அழுத்தம் சார்ந்த தாற்கொலை குறித்து பேசியவர், “எனக்கு 20, 21 வயதாக இருக்கும்போது நான் தற்கொலை பற்றியெல்லாம் யோசித்திருக்கிறேன். ‘எவ்வளவு பெரிய கெட்டிக்காரன் நான், ஆனால், இந்த சினிமா உலகமும், கலை உலகமும் என்னை மதிக்கவே மாட்டேங்குது. நான் செத்துப் போனால்தான் இப்படியொரு கலைஞன் இருந்தான் என எல்லாருக்கும் தெரியும்’ என்று கவலைப்பட்டிருக்கிறேன். அப்போது அனந்து என்ற என் குரு, ‘உன்னைவிட பெரியவன் நான் என்னையே பலருக்கும் அடையாளம் தெரியாது. எதற்கும் பொறுமை வேண்டும். சரியான நேரத்தில் எல்லாம் நடக்கும்’ என்று கூறி ஆறுதல் படுத்தினார்.
எப்போதும் இருளாகவே இருக்காது, வெளிச்சம் நிச்சயம் வரும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் நிலைமையை மாற்ற கனவுகாணுங்கள், அதை அடைவதற்கு விடாமல் முயற்சி செய்யுங்கள். கலாம் அய்யா சொல்வதுபோல் அந்தக் கனவு உங்களை உறங்க விடாமல் செய்யும் கனவாக இருக்க வேண்டும். ஒருநாள் நம் வாழ்க்கை மாறும், மாற்ற வேண்டும் சிந்தித்து, அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். அப்படி நினைத்தால் இதுபோன்ற நெகட்டிவான எண்ணங்களெல்லாம் வராது”
‘வாழ்க்கைக்கு பணம் எந்த அளவிற்கு முக்கியம்?’ என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், “என்னுடைய 15-16 வயது வரை என்னிடம் பணமில்லை. 6 மாதங்கள் பணமேயில்லாமல் சமாளித்திருக்கிறேன். மூச்சில்லால் நம் உயிர் 40 நொடிகள் அல்லது 1 நிமிடம் தாங்கும். தண்ணீர் இல்லாமல் 6-7 நாட்கள் தாங்கும். சோறில்லாமல் 10 நாட்கள் வரை தாங்கும். இதையெல்லாம் விட பணம் எப்படி முக்கியமாகும். இவற்றையெல்லாம் வாங்குவதற்கான கருவி மட்டுமேதான் பணம். அதை நாம்தான் கையாள வேண்டும், அது நம்மைக் கையாளக் கூடாது” என்றார்.