புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்றார். அதே ஆண்டின் அக்டோபர் மாதம் முதல் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலியில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 105-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய நிகழ்ச்சியை இஸ்ரோ யூடியூப் சேனலில் 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரலையில் பார்த்துள்ளனர். இது நாட்டு மக்கள் சந்திரயான்-3 மீது எவ்வளவு ஆழமான ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பதை உணர்த்துகிறது.
அதை தொடர்ந்து ஜி-20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதால் நாட்டு மக்களின் மகிழ்ச்சி இரட்டிப்பானது. இந்தியா மிகவும் செழிப்பாக இருந்த காலத்தில் பட்டுப் பாதை நம் நாட்டில் மட்டுமல்லாது உலக அளவிலும் பேசுபொருளாக இருந்ததை அறிவீர்கள். இந்த பட்டுப் பாதை வர்த்தகத்துக்கு முக்கிய பங்கு வகித்தது. இதுபோல இப்போது ஜி-20 உச்சி மாநாட்டில் மேலும் ஒரு பொருளாதார வழித்தடத்தை இந்தியா பரிந்துரை செய்துள்ளது. அதுதான் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம். அடுத்து வரும் பல நூறு ஆண்டுகளுக்கான சர்வதேச வர்த்தகத்துக்கு இந்த வழித்தடம் அடித்தளமாக அமையப் போகிறது. இந்த வழித்தடத்துக்கான முயற்சி இந்திய மண்ணில் எடுக்கப்பட்டது என வரலாறு நினைவுகூரும்.
வரும் 27-ம் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட உள்ளது. சுற்றுலாத் துறை குறைந்த முதலீட்டில் அதிக வேலைவாய்ப்பை வழங்குகிறது. சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் நல்லெண்ணம் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், இந்தியா மீதான நல்லெண்ணம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
வரும் அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் பொது இடங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இது காந்திக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்.
பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருக்கின்றன. இதற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் வாங்க வேண்டும்.இவ்வாறு பிரதமர் பேசினார்.
சென்னை ஆட்டோ ஓட்டுநர்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் எம்.ராஜேந்திர பிரசாத் கடந்த 30 ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட புறாக்களை தனது வீட்டில் பராமரித்து வருகிறார். இதற்காக அவர் பெருமளவு பணத்தை செலவிடுகிறார்.
ஆனாலும் அவர் தனது பணியில் உறுதியாக இருக்கிறார். இதுபோன்ற சில தனித்துவமான முயற்சி பற்றிய தகவல் உங்களுக்கு கிடைத்தால் அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்’’ என்றார்.
ஜெர்மனி பெண் பாட்டு: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “இந்திய கலாச்சாரம் மற்றும் இசை ஆகியவை சர்வதேச அளவில் பரவி உள்ளது. இப்போது ஒருகுரல் பதிவை கேளுங்கள்” என்றார். அதன் பிறகு, விஷ்ணு ஸ்லோகமான‘ஜகத் ஜானா பாலம்’ என்ற சம்ஸ்கிருத பாடல் மற்றும் ஒருகன்னட பாடல் ஒலிபரப்பப்பட்டன. பின்னர் பிரதமர் மோடி கூறும்போது, “என்ன இனிமையான குரல். இறைவன் மீதான அவரின் அன்பைஉணர முடிகிறது. இந்த இனிமையான குரல் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு 21 வயது பெண்ணுக்கு சொந்தமானது என்று நான் கூறினால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவரின் பெயர் கசாண்ட்ரா மே ஸ்பிட்மான்.
கசாண்ட்ரா சம்ஸ்கிருதம், கன்னடம் மட்டுமல்லாது இந்தி, மலையாளம், தமிழ், உருது, அசாமி, வங்கம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் இவர் இதுவரை இந்தியாவுக்கு வந்ததே இல்லை’’ என்றார்.