மூணாறு : கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் அருகே பணியின் போது காட்டு யானையிடம் சிக்கிய வனக்காவலர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.
மறையூர் அருகே வண்ணான்துறை மலைவாழ் மக்கள் வசிக்கும் காலனி உள்ளது.
இப்பகுதியைச்சேர்ந்த மணி 34, அங்குள்ள வனத்துறை அலுவலக வனக்காவலராக உள்ளார். இவரும், சக ஊழியர் ஈஸ்வரமூர்த்தியும் நேற்று முன்தினம் இரவு சந்தன மரம் பாதுகாப்பு தொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வண்ணான்துறைக்கு அருகே கொசச்சோலை பகுதியில் மரக்கிளை முறிந்து விழும் சப்தம் கேட்டது. சந்தன மரத்தை யாரோ திருட்டுத்தனமாக வெட்டுவதாக நினைத்து அவர்களை பிடிக்க இருவரும் வெவ்வேறு வழியில் சென்றனர்.
மரக்கிளையை முறித்தது ஆண் காட்டு யானை என்பது தெரியாமல் அதன் முன் மணி சென்றார். அருகில் சென்றவர் யானையை பார்த்து சுதாரிக்கும் முன், மணியின் காலை யானை துதிக்கையால் இழுத்து பள்ளத்தில் தள்ளியது. அதில் வலது கால் எலும்பு முறிந்தது.
மணியின் அலறல் சப்தம் கேட்டுச் சென்ற ஈஸ்வரமூர்த்தி நிலையை உணர்ந்து வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் அளித்தார்.
காந்தலூர் வனத்துறை அதிகாரி ரகுலால் தலைமையில் கூடுதல் வனக்காவலர்கள் அங்கு சென்று மணியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement