"சின்ன பட்ஜெட் படங்களை இப்ப எடுக்காதீங்கன்னு விஷால் சொல்றது சுயநலம்!" – இயக்குநர் லெனின் பாரதி

சின்ன பட்ஜெட் படங்கள் நஷ்டம் அடையாமல் காப்பாற்ற, சில வருடங்களுக்கு முன்பு புதிய ஆலோசனையெல்லாம் கொடுத்த, நடிகர் விஷால் தற்போது, “ஒரு கோடி ரூபாயிலிருந்து 4 கோடி ரூபாய் வரை என பட்ஜெட் வைத்துக் கொண்டு சினிமா எடுக்க வராதீர்கள்.

சிறு பட்ஜெட் படங்களை எடுத்தால் உங்களுக்குச் சல்லிக்காசுகூட திரும்பக் கிடைக்காது. ஏற்கெனவே, 120 சிறு பட்ஜெட் படங்கள் வெளியிட முடியாமல் காத்துக்கிடக்கின்றன. தயவு செய்து இன்னும் இரண்டு வருடங்களுக்கு வந்துவிடாதீர்கள்” என்று ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

விஷால்

இதற்குப் பதிலடியாக, “சிறிய பட்ஜெட் என்று வெறுமனே வார்த்தைகளைப் பயன்படுத்தி நல்ல திரைப்படங்களைத் தடுப்பது என்பது தமிழ் சினிமாவிற்கு நாமே நம் தலையில் மண்ணள்ளிக் கொட்டுவதற்குச் சமம். இந்த பாசிச எண்ணம் யாரிடம் இருந்தாலும் அது தவறு” எனக் கடுமையாகச் சாடியிருக்கிறார் நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட். இப்படிப் பல்வேறு சினிமா பிரபலங்கள் கடுமையான கண்டனக் குரல்களை எழுப்பிவரும் நிலையில், விஷாலின் கருத்து குறித்து இயக்குநர் லெனின் பாரதியிடம் நாம் கேட்டபோது,

“எல்லா பெரிய நடிகர்களுமே நூற்றுக்கணக்கான கோடிகளில் லாபம் குவிப்பதுதான் சினிமான்னு நினைச்சுக்குறாங்க. அவங்க புரிதல் ரொம்ப தப்பானது. சின்ன பட்ஜெட்ல எடுக்கப்பட்ட எத்தனையோ படங்கள் தியேட்டரிலும் ஓ.டி.டி-யிலும் வெளியாகி மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்கள்தான் நல்ல கதைக்களத்துடன் வருகின்றன. நடிகர்களைச் சார்ந்து இல்லாமல், சமூகத்திற்குத் தேவையான சுதந்திரமான கருத்துகளைச் சொல்லி மக்களுடன் உரையாடுகின்றன. மக்களின் மனநிலையையும் ஆரோக்கியமுடன் வைத்திருக்கின்றன. சிந்தனையில் விவாதத்தையும் தூண்டுகின்றன.

அயலி

உதாரணமாக, ‘அயலி’ வெப் சீரிஸ் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதுதான். பெரிய சக்சஸ்ஃபுல் ஆனது. சமூகத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தையும் விவாதத்தையும் ‘அயலி’ உருவாக்கிச்சின்னு எல்லாருக்குமே தெரியும். அதுல, எந்தவிதமான ஹீரோயிசமும் ஆபாசமும் வன்முறையும் இல்ல. நல்ல கதைகள் தானாகவே மக்களிடம் போய்ச் சேர்ந்துவிடும். மக்களும் நல்ல கதைகளுக்காகத்தான் ஏக்கத்தோடு காத்திட்டிருக்காங்க. ஆனா, மார்க்கெட்டுக்கு ஏற்றமாதிரி நூறு கோடிகளில் சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்கள் நல்ல கதைகளைக் கொடுக்கிறதில்ல. அந்த மாதிரி, கதைகளில் நடிப்பதுமில்லை. அவங்களைப் பொறுத்தவரை ஹீரோயிச சினிமா அழிஞ்சிடவேக் கூடாது. நல்லா சம்பாதிச்சிட்டுப் போகணும் என்பதுதான் நோக்கமா இருக்கு. சினிமாவைக் காப்பாத்தணுங்கிற எண்ணமோ சமூகப் பொறுப்போ அவர்களுக்குக் கிடையாது.

அதுவும், சமீப காலமாகப் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் வீடியோ கேம் பார்க்கிற மாதிரிதான் வந்திக்கிட்டிருக்கு. ஜனரஞ்சகம் என்ற ஒரு பொய்யான போர்வைக்குள் வன்முறை, பழிவாங்குதல், பெண்களைப் போகப்பொருளாகச் சித்திரித்தல் போன்ற எண்ணங்களை விதைத்துத்தான் சம்பாதிக்கிறாங்க.

குறிப்பா, சன் பிக்சர்ஸ் வருகைக்குப் பிறகுதான், ஒரு படத்தை மொத்தமாக எல்லா ஊரிலும் வெளியிடும் கலாசாரம் உருவானது. இதுக்கு முன்னாடி அப்படி கிடையாது. மொத்தமா 500 ஸ்கிரீன், 600 ஸ்கிரீன்னு வெளியிட்டு ஒரே வாரத்துல லாபம் எடுத்துடறாங்க. இப்படிப்பட்ட, திரையிடல் முறை வந்ததால்தான் சின்ன பட்ஜெட் படங்கள் ஓரங்கட்டப்பட்டன. முன்பெல்லாம், சென்னை காசி தியேட்டரில் ஒரு படம் ஓடினால் உதயம் தியேட்டரில் வேறு படமும் கமலா தியேட்டரில் வேறு படமும் ஓடும். இப்போ அப்படி இல்லையே? உதயம் தியேட்டர்ல அஞ்சு ஸ்கிரீன் இருந்தா, எல்லாத்திலும் ஒரு படத்தையே போடுறாங்க. இந்த நிலைதான் மாற்றப்படவேண்டும். ஆனால், மாற்றுவதற்கான முயற்சியே எடுப்பதில்லை.

தியேட்டர்

அதேமாதிரி, எல்லா ஆட்சியாளர்களின் காலகட்டங்களிலும் ஒருசில தயாரிப்பு நிறுவனங்களின் ஆதிக்கம் இருந்துகிட்டேதான் வந்திருக்கு. இப்போ ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு நிறைய தியேட்டர்கள் கையில் இருக்கலாம். அ.தி.மு.க ஆட்சியில் ஜாஸ் சினிமாஸிடம் இருந்திருக்கலாம். இப்படி, ஆதிக்கம் இருக்கிறதே தவிரத் தரமான படங்களைக் கொடுக்க வழிவகை செய்வதில்லை. எல்லோரும் சேர்ந்து பார்வையாளர்களுக்கு எல்லா விதமான படங்களையும் கொடுக்கவேண்டும். அது நல்ல படமா? பெரிய படமா என்பதையெல்லாம் பார்வையாளர்கள் முடிவு செய்யட்டும். அதைவிடுத்து, ‘நீங்க இப்ப படம் எடுக்க வர்றாதீங்க’ன்னு விஷால் சொல்றது சிறு தொழிலையும் சிறு முதலாளிகளையும் நசுக்குவது மாதிரி இருக்கு.

மேலும், பெரிய படங்கள் எப்போதாவது பண்டிகை காலங்களில்தான் வருகின்றன. இடைப்பட்ட காலங்களில் திரைத்துறையின் பணியாற்றும் தினக்கூலித் தொழிலாளர்களின் வாழ்வியலை உறுதி செய்வதும் பிழைப்பு கொடுப்பதும் சிறு பட்ஜெட் படங்கள்தான். பெரிய நடிகர்கள் மார்க்கெட்டுக்கு ஏற்றமாதிரி ரெண்டு படத்துக்குச் சம்பளம் வாங்கினா பத்து தலைமுறைக்கு வாழவைக்கலாம். ஆனா, அன்றாட தினக்கூலிகளான தொழிலாளர்கள் அப்படிக் கிடையாது. ரஜினி படத்துக்கு வேலை செஞ்சாலும் அதே 720 ரூபாய் பேட்டாதான். புதுமுகங்கள் படத்துக்கு வேலை பார்த்தாலும் அதே 720 ரூபாய் பேட்டாதான் கிடைக்கும்.

சின்ன படங்கள் எவ்ளோவுக்கு எவ்ளோ அதிகமா வருதோ, தொடர்ச்சியான வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். சினிமாவும் செழிக்கும். சினிமாவைக் கலை நோக்கோடு பார்க்காமல் பிசினஸா மாற்றிட்டாங்க” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துபவரிடம், மலையாள சினிமாவில் தொடர்ந்து குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்கள் வெளிவருவது குறித்துக் கேட்டோம்…

லெனின் பாரதி

“கேரளாவில் நம்மைவிட மக்கள்தொகை ரொம்ப குறைவுதான். அதனால், பார்வையாளர்களும் குறைவு. அவர்களாலேயே, சின்ன படங்களை தியேட்டரில் ரிலீஸ் பண்ண முடியும்போது நம்மால முடியாதா? அதுவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ரெண்டு, மூணு தியேட்டர்களை அரசே கட்டிவைத்து நடத்திக்கிட்டு வருது. அதனால, முதலாளித்துவத்தின் ஆதிக்கம் குறைஞ்சிருக்கு. தமிழகத்துல, அதுபோன்ற சூழல் இல்லை. புதிதாக வரும் அரசு, தன் சார்பில் தியேட்டர்கள் கொண்டுவரப்படும் என்கிறது. வெறும் வார்த்தை அளவுல இருக்கே தவிர அது செயல் வடிவம் பெறுவதில்லை.

கேரளாவுல ஆடியன்ஸ் குறைவா இருந்தாலும் பார்வையாளர்கள் தரத்தை அவங்க மாத்தி வெச்சிருக்காங்க. வித்தியாசமான கதைகளையும் சொல்றாங்க. ஆனா, தமிழ் சினிமாவுல பார்வையாளர்கள் தரத்தைக் குறைக்கிறது மட்டுமில்லாம தரமான படங்களையும் கொடுக்க மாட்டேங்கறாங்க. நல்ல படங்கள் வந்தா மக்கள் தியேட்டர் வருவதற்கு ரெடியா இருக்காங்க. இந்தச் சிக்கலைக் களையத் தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம் என எல்லா சங்கங்களும் பேசி ஒவ்வொரு வாரமும் ஒரு சின்ன பட்ஜெட் படம் வெளியாக வழிவகை செய்யவேண்டும். பெரிய நடிகர்களான விஜய் படம் ஒரு பண்டிகை காலத்திலும், அஜித் படம் ஒரு பண்டிகைக் காலத்திலும் வெளியாகிறது.

விஜய் – அஜித்

பெரிய படங்கள் லாபங்களைக் குவிக்க எப்படி வசதியாகப் பிரித்துக்கொள்கிறார்களோ, அதேமாதிரி சின்ன படங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கவேண்டும். அதைவிட்டுட்டு சினிமாவில் இருக்கிற பெரிய நடிகர்கள் சம்பாதிச்சா போதும்னு நினைச்சுக்கிறாங்க. இந்தப் போக்கைத்தான் அவங்க கைவிடணும்.

சின்ன படங்களை இப்ப எடுக்காதீங்கன்னு விஷால் சொல்றது முழுக்க முழுக்க சுயநலமான பேச்சு. ஹீரோயிச சினிமாவை மட்டுமே வாழவைக்கணும்ங்கிற எண்ணம்தான். சின்ன படங்கள்தான் சினிமாவை பெருங்காலமாக வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. சினிமாவைத் தொடர்ச்சியாகப் பார்வையாளர்களிடம் கொண்டு செல்கின்றன. அதற்கு ஏற்பாடு பண்ணாமல் சின்ன பட்ஜெட் படங்கள் வரக்கூடாது என்பது பெரியண்ணன் மனநிலைதான்” என்கிறார் வருத்தமுடன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.