டக்வே: விண்ணில் உள்ள, ‘பென்னு’ எனும் சிறுகோளில் இருந்து, ‘நாசா’ முதல்முறையாக சேகரித்த மாதிரிகள், வெற்றிகரமாக நேற்று பூமியை வந்தடைந்தன.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, பென்னு எனும் சிறுகோளில் இருந்து மாதிரிகளை சேகரிப்பதற்காக, ‘ஆசிரிஸ் ரெக்ஸ்’ என்ற விண்கலத்தை, 2016ல் விண்ணுக்கு அனுப்பியது.
இரண்டு ஆண்டுகள் பயணித்து, 2018ல் பென்னு எனும் சிறுகோளை அடைந்த அந்த விண்கலம், 2020ல் அதன் மேற்பகுதியில் இருந்து மாதிரிகளை சேகரித்தது.
அதன் பின் பயணத்தை துவங்கிய விண்கலம், பூமியில் இருந்து, ஒரு லட்சம் கி.மீ., தொலைவுக்கு வந்தபோது, அந்த மாதிரிகள் அடங்கிய, ‘கேப்ஸ்யூல்’ பாராசூட் வாயிலாக பூமியை நோக்கி இறங்க துவங்கியது.
இந்த கேப்ஸ்யூல், அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள பாலைவனத்தில் நேற்று வெற்றிகரமாக தரை இறங்கியது.
அந்த கேப்ஸ்யூலில், 250 கிராம் அளவிலான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்கு முன் ஜப்பான் சேகரித்த சிறுகோள் மாதிரிகளை விட இது அளவில் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
இது போன்ற சிறுகோள் மாதிரிகளை நாசா சேகரித்திருப்பது இதுவே முதல்முறை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement