மதுரையில் பாதியில் முடிந்த ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி – சொதப்பியது எப்படி?

மதுரை: போதிய முன்னேற்பாடு இன்றி மதுரை மாநகராட்சி நிர்வாகம் நேற்று நடத்திய ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில் கடும் நெரிசல் ஏற்பட்டு பலர் மயங்கி விழுந்ததால், பாதியிலேயே நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

மதுரை மாநகராட்சி சார்பில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி அண்ணாநகர் சாலையில் நேற்று நடத்தப்பட்டது. இதில் ஆடல், பாடல், சிலம்பம், தனித் திறமைகளை வெளிப்படுத்துதல் என பல்சுவை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரோனாவுக்கு பிறகு 4 ஆண்டுகள் கழித்து, இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

“WOW MADURAI” என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்காக, அண்ணாநகர் சாலையில் வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை மட்டுமில்லாது மேலூர், உசிலம்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் வந்திருந்தனர்.

அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி, ஆட்சியர் சங்கீதா, ஆணையர் பிரவீன்குமார் ஆகியோர் பங்கேற்றனர். நடிகர் சூரி காலை 8.10 மணியளவில் வந்து பேசிவிட்டு 5 நிமிடங்களில் கிளம்பிச் சென்றார். அதன் பிறகு மேடையில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் கடும் நெரிசல் ஏற்படத் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியைக் காண அண்ணாநகர் முதல் மேலமடை வரை சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்தனர். ஆனால், அவர்களை ஒருங்கிணைக்கவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் போதுமான ஏற்பாடுகளை மாநகராட்சி செய்யவில்லை. கட்டுக்கடங்காத கூட்டம் திரளும் என அதிகாரிகளும் எதிர்பார்க்கவில்லை.

மேலும் தூரத்தில் இருப்பவர்கள் நிகழ்ச்சியைப் பார்க்கும் வகையில் எல்இடி திரை வசதியும் ஏற்படுத்தவில்லை. போதுமான போலீஸாரும் வரவழைக்கப் படவில்லை. இதனால் அனைவரும் முண்டியடித்து மேடைக்கு அருகே வர முயன்றனர். ஒரு கட்டத்தில் நெரிசல் அதிகரித்து தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒருவர் மீது மற்றொருவர் விழுந்ததால் ஆத்திரத்தில் சிலர் கூட்டத்தில் காலணிகளை தூக்கி வீசி தாக்கிக் கொண்டனர்.

நெரிசலில் சிக்கி சிலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். போலீஸாரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதனால் உடனடியாக நிகழ்ச்சியை முடிக்கும்படி போலீஸார் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர். அதனால், காலை 7 மணி முதல் காலை 10.30 ணி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி 8.30 மணிக்குள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இது குறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் கூறிய தாவது: திட்டமிட்டபடி நிகழ்ச்சி 7 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. நடிகர் சூரியை பார்க்கவும், மேடைக்கு அருகில் இருந்து நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் கூட்டம் முண்டியடித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் நெரிசலில் சிக்கிய பெண்கள், குழந்தைகள் கதறினர். அவர்களுடன் வந்தவர்கள் கெஞ்சியும் போலீஸார் அமைச்சர்கள், வி.ஐ.பி-க்களை காரணம் காட்டி வெளியே விடவில்லை.

அதனால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த காட்டிய ஆர்வத்தை பாதுகாப்புடன் நடத்த தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய மாநகராட்சி நிர்வாகம் தவறிவிட்டது. அமைச்சர்கள் புறப்பட்டுச் சென்றதும், அடுத்த நிமிடமே நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

போலீஸார் விளக்கம்: போக்குவரத்து போலீஸார் கூறுகையில், இது போன்ற நிகழ்ச்சி போக்குவரத்து அதிகம் இல்லாத சாலையில் நடத்தப் பட்டிருக்க வேண்டும். எங்களிடம் கேட்டிருந்தால், இந்த இடத்தைத் தவிர்க்கும்படி கூறியிருப்போம். முக்கியச் சந்திப்பு பகுதியில் பெரும் கூட்டம் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.