நியூயார்க்: ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகளும் உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ள ‘5 ஐஸ்’ (5 கண்கள்) என்ற பெயரில் கூட்டணியை கடந்த 1941-ல் உருவாக்கின.
கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் நிஜார் கொலையில் இந்திய ஏஜென்ட்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக நம்பத் தகுந்த உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளன என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கனடாவில் உள்ள அமெரிக்க தூதர் டேவிட் கோகன், நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘‘5 ஐஸ்’ அமைப்பின் உளவுத் தகவல் அடிப்படையில்தான், காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார் என கூறியுள்ளார்.
இதையடுத்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஹர்தீப் சிங் கொலை செய்யப்பட்ட பின் கனடாவுக்கு உளவுத் தகவலை அளித்தது ‘5 ஐஸ்’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமெரிக்காதான் என தெரிவித்துள்ளது. இந்த ‘5 ஐஸ்’ அமைப்பு சட்டம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில் செயல்படுவதாகவும், தங்கள் நாட்டின் நலன்கள் குறித்த தகவல்களை ஒருவொருக்கொருவர் பகிர்ந்து கொள்வதாகவும் கனடா அரசின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக தொடங்கப்பட்ட ‘5 ஐஸ்’ அமைப்பில் பின்னர் நெதர்லாந்து, டென்மார்க், பிரான்ஸ் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைந்து ‘9 ஐஸ்’ அமைப்பாகவும், அதன்பின் பெல்ஜியம், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் இணைந்து ‘14 ஐஸ்’ கூட்டணியாக மாறியுள்ளது.