ஒரு லட்சம் பனை விதைகளை சேகரித்து திருப்பத்தூர் மாவட்டக் கிராமப்புறங்கள் மற்றும் ஏரிகளில் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு லட்சம் பனைவிதைள் நடவு செய்ய வேண்டும் என்ற இலக்கோடு தொடங்கப்பட்டதுதான் `பசுமை இயக்கம் முயற்சி குழு’. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் இருக்கும் குழு இது.
திருப்பத்தூரில் `ஒரு லட்சம் பனை விதைகள் நடவு’ என்ற இலக்கு நிறைவடையும் நாளில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் 10,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.
இந்தப் பசுமை இயக்கக் குழுவில் உள்ள மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் திருப்பத்தூரை சுற்றியுள்ள அனைத்து இடங்களுக்குச் சென்று பனை விதைகளை சேகரிக்கின்றனர். முதலில் பனம் பழங்களைச் சேகரித்து, பிறகு அவற்றில் உள்ள விதைகளை பிரித்து எடுக்கின்றனர். சில நாள்கள் காய வைத்து, பிறகு பனை விதைகளாக நடவு செய்யப்படுகிறது.
இந்நிலையில் செப்டம்பர் 23 அன்று இந்த பசுமை இயக்க குழுவின் இறுதி கட்டமாக திருப்பத்தூர், தாவுதம்பட்டி ஏரியில் 10,000 பனை விதைகள் மாணவர்களின் உதவியால் விதைக்கப்பட்டன.
கொரோனாவினால் தடைப்பட்டிருந்த இந்த பசுமை இயக்க முயற்சி, மீண்டும் உயிரோட்டம் பெற்று, 40,000 பனை விதைகள் என்ற இலக்கோடு களமிறங்கியது. மாணவர்கள் கிராமபுறத்து மக்கள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தின் உதவியோடு 40,000-க்கும் மேற்பட்ட விதைகள் சேகரித்துள்ள நிலையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அன்று விதை நடவின் துவக்கமாக 2,200 விதைகள் சோமலாபுரம் மற்றும் பொம்மிக் குப்பம் ஏரிக்கரைகளில் விதைக்கப்பட்டன.
தொடர்ந்து தோக்கியம், சீரங்கப்பட்டி மற்றும் கருப்பனூர் பஞ்சாயத்துகளில் உள்ள ஏரியின் முன்கரையில் 1000 விதைகள் நடவு செய்யப்பட்டன. 24 ஆகஸ்ட் அன்று அம்பலூர் ஏரிக் கரையில் 7000 பனை விதைள் விதைக்கப்பட்டன.
ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப். 19ம் தேதி வரை இருங்கம்பட்டு கேத்தாண்டப்பட்டி, மட்ரபள்ளி, பல்லவெளி, ஆதியூர், குனிச்சி, மோட்டூர், நத்தம், முத்தம்பட்டி, செவ்வாத்தூர், கசிநாயக்கம்பட்டி, வெங்காயப்பள்ளி, பெரியகரம், மூக்கனூர் ஆகிய ஊராட்சிகளில் 1,000 விதைகள் வீதம் 1264 மாணவர்களைக் கொண்டு 30,000 பனை விதைகள் விதைக்கப்பட்டன.
இந்த பெரும் முயற்சியின் நிறைவாக 10,000 பனைவிதைகளை ராவுத்தம்பட்டி ஏரிக்கரையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் 23.09.2023 அன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களால் விதைக்கப்பட்டது. மேலும், இந்நிகழ்வின் போது வருகை தந்த திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பனை விதைகளை நடவு செய்தும் நிகழ்வினை சிறப்பித்தார் .
நிகழ்வின்போது பேசிய மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், “நான் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மூன்று மணி நேரத்தில் 80,000 பனை விதைகளை நடவு செய்திருக்கின்றோம். முன்பெல்லாம் எங்கு பார்த்தாலும் மரம் செடி கொடியாக பசுமையாகத்தான் காட்சியளிக்கும். ஆனால், தற்போது விதவிதமான நெகிழி குப்பைகள்தான் பார்க்க முடிகிறது” என்றார்.
தற்போது திருப்பத்தூரில் ஒரு கோடி விதைகள் நடப்போவதாகவும், அவற்றில் பனை விதைகள் மட்டுமல்லாமல், அனைத்து வகையான மர விதைகளையும் நடப்போவதாகவும் மாணவர்களிடம் கூறி ஊக்கப்படுத்தினார். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தெ.பாஸ்கர பாண்டியன் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று சில மாதங்களுக்குப் பிறகு ஒரே மாதத்தில் 1000 பண்ணைக் குட்டைகள் அமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்து சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.