'As Useless As Rusted Iron' – காங்கிரஸை சாடித் தள்ளிய பிரதமர் மோடி!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் பா.ஜ.க தேர்தல் களப் பணியாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மத்தியப் பிரதேசத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க ஆட்சி செய்து வந்தது. தற்போதைய மத்தியப் பிரதேச இளைஞர்கள், காங்கிரஸ் அரசின் மோசமான ஆட்சியைக் காணாதது அதிர்ஷ்டம். சுதந்திரத்துக்குப் பிறகு மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நோய் ஆட்சியாக இருக்கிறது.

பிரதமர் மோடி

இதை மீண்டும் கொண்டுவரக் கூடாது என்றால், காங்கிரஸுக்கு வாக்களிக்கக் கூடாது. காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த ஒவ்வொரு மாநிலத்தையும் அழித்துவிட்டது. மத்தியப் பிரதேசத்திலும் அதையே செய்யும். காங்கிரஸ் முதலில் திவாலானது, பின்னர் அழிந்து, இப்போது அது வேறு ஒருவரால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவர்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள்… உங்களுக்குத் தெரியும்! அவர்கள் நகர்ப்புற நக்சல்கள். தற்போது பா.ஜ.க-வின் இரட்டை இயந்திர அரசு அயராது உழைத்து வருகிறது. எனவே மத்தியப் பிரதேச மக்கள் மீண்டும் துரதிஷ்ட நாள்களைச் சந்திக்க வேண்டியதில்லை.

மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, வரவிருக்கும் ஆண்டுகள் மிக முக்கியமானவை… குடும்ப ஆட்சி, ஊழல் நிறைந்த கட்சியான காங்கிரஸுக்கு வாய்ப்பு கிடைத்தால், அது இந்த மாநிலத்திற்கு மிகப்பெரிய இழப்பு. காங்கிரஸுக்கு எதிர்காலத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை இல்லை. அந்தக் கட்சி `துருப்பிடித்த இரும்பு’ போன்றது. அவர்களால் நாட்டுக்கு நல்லது நினைக்க முடியாது, நாட்டுக்கு நல்லது என நாம் அறிமுகப்படுத்திய அனைத்தையும் எதிர்த்தார்கள்.

பிரதமர் மோடி

பா.ஜ.க 13.5 கோடி மக்களை வறுமையிலிருந்து விடுவித்திருக்கிறது. இது மத்தியப் பிரதேசத்தின் மக்கள்தொகையைவிட அதிகம். எனவே, இந்த மோடியின் உத்தரவாதங்கள் ஒருபோதும் பொய்த்துப் போகாது. பா.ஜ.க அரசான நாங்கள் மக்களவையில் பெண்களுக்கான மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றினோம், இதுவும் எங்கள் வாக்குறுதியின் ஒரு பகுதி. இந்த மசோதா மூலம், இந்தியா புதிய வரலாற்றை உருவாக்கியிருக்கிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.