INDvAUS: “அத்தனை பேரும் அடிப்போம், ஒரே மாதிரி Sync!" – ஆஸியை மிரட்டிய இந்தியா!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், இரண்டில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி இருக்கிறது இந்திய அணி. நேற்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அதகளமான வெற்றியைப் பெற்றது.

Gill

டாஸ் வென்ற ஆஸி., அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். “கத்தி எடுக்குறது தான் நீங்க. களத்துல நாங்க தான்.!” என்பது போல், டாஸில் தோற்றாலும் இந்திய அணியின் பேட்டிஸ்மேன்கள் பிரித்து மேய்ந்து விட்டனர். முதலில் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் – கில் கூட்டணி களமிறங்கியது. நான்காவது ஓவரை வீசிய ஹேசல்வுட் ருதுராஜின் விக்கெட்டை வீழ்த்தி வழி அனுப்பினார். வெறும் இரண்டு பவுண்டரிகள் மட்டுமே அடித்தார், ருதுராஜ் கெய்க்வாட். இதற்குப் பிறகு பிடித்தது தான் பேயாட்டம். அடுத்த விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷ்ரேயாஸ் – கில் இணை இவ்வளவு அதிரடியாக இருக்குமென ஆரம்பத்தில் எவருமே நினைக்கவில்லை.

Shreyas

இந்த ஜோடியின் பயணம் 27 ஓவர்கள் வரை நீடித்தது. இவர்களைப் பிரிக்க, ஆஸ்திரேலிய அணியின் பௌலர்கள் அனைவருமே திணறிவிட்டனர். நூல் பிடித்ததைப் போல, இருவரின் ரன்களும் ஒரே அளவில் உயர்ந்து கொண்டிருந்தது. இதற்கிடையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்றுநேரம் தாமதமானது. மழைக்குப் பிறகு தொடர்ந்த ஆட்டம், பரபரவென நகரத் தொடங்கியது. இருவரும் அரைசதத்தைக் கடந்து விட்ட நிலையில், 19.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 150 ரன்களாக இருந்தது.

ஆனால், அடுத்தடுத்த ஓவர்களில் வந்த ரன்களைப் பார்க்கும் போது, நிச்சயம் இந்திய அணி 400 ரன்களைக் கடந்து விடும் என்றே தோன்றிவிட்டது. ஹேசில்வுட், அபாட், ஜாம்பா, கேமரூன் கிரீன் என ஆஸியின் டாப் கிளாஸ் பௌலர்களை மாற்றி மாற்றி கொண்டு வந்தும் பிரயோஜனப்படவில்லை. இடைப்பட்ட ஓவர்களில் ரன்வேகம் சற்று தொய்வடைந்தாலும் பார்ட்னர்ஷிப் உடையவில்லை. 29வது ஓவரின் முடிவில் அணியின் ஸ்கோர் 202 ஆக இருந்தது. ஷ்ரேயாஸ் சதம் அடித்த நிலையில், 31வது ஓவரில் ஆபோட் பௌலிங்கில் ஆட்டமிழந்தார். இதற்கடுத்து, கில்லும் சதமடித்துவிட்டு 35வது ஓவரில் அவுட்டானார். இதில் ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், கில் 104 ரன்களும் எடுத்திருந்தனர்.

Surya & Rahul

அடுத்து வந்த கே.எல்.ராகுல் மற்றும் இஷான் கிஷன் இருவரும் ஜோடி சேர்ந்தனர். ஒரு புயல் கரையைக் கடந்தாலும் அடுத்தடுத்த புயல்கள் வலுப்பெற்றுக் கொண்டிருப்பது போல் இருந்தது, இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர். இஷான் கிஷன் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்து விட்டு ஆட்டமிழந்தார். 41வது ஓவரில் களமிறங்கிய சூரியகுமார், ஒட்டுமொத்த ஷோ ஸ்டீலராக மாறிவிட்டார். அடுத்து வந்த 9 ஓவர்கள் முழுவதும் பவுண்டரி மழை தான். ஆஸி., அணிக்கு எதிராக இந்தியாவின் வரலாற்று ஸ்கோரைப் பதிவு செய்யக் காரணமே, சூர்யா தான். கேமரூன் கிரீன் வீசிய 44வது ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்ஸர்கள் அடித்து அசர வைத்தார். இவருக்கு இணையாக கே.எல்.ராகுலும் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடித்து அரைசதத்தைக் கடந்தார். 46வது ஓவரில் கேமரூன் கிரீன், ராகுலை அவுட்டாக்கிய நிலையில் பௌலிங்கில் 100 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

“நான் சும்மாவே ஆடுவேன்… என் காலுல சலங்கைய வேற கட்டி விட்டீங்க!” என்பது தான் சூர்யாவின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கும்.

எந்த மெனக்கெடலும் இல்லாமல் பந்தை திசை மாற்றி ஆடுவது தான், சூர்யாவின் ஸ்டைல். அவருக்கு ஏற்றார் போல ஸ்பீட் பௌலர்களைக் கொண்டு வந்தது, ஆஸி. முடிவில் இந்திய அணி 399 ரன்களை எடுத்தது. 6 பவுண்டரி, 6 சிக்ஸர் அடித்ததுடன் 72 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார் சூர்யகுமார்.

Rain

இந்த இமாலய இலக்கிற்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு பவர்ஃபுல் பேட்டிங் லைன்-அப்பை வைத்திருக்கும் முரட்டு அணி, ஆஸி. ஆனால், நாம் நினைத்தது வேறு நடந்தது வேறு. அடுத்து ஆஸி., அணியின் ஒப்பனர்களாக மேத்யூ ஷார்ட் மற்றும் வார்னர் ஆட வந்தனர். பிரசித் கிருஷ்ணா வீசிய இரண்டாவது ஓவரில் ஷார்ட்டின் விக்கெட் விழுந்தது. இதே ஓவரில், அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் கோல்டன் டக்-அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த விக்கெட்டுக்கு வார்னருடன் ஜோடி சேர்ந்தார், லாபுஷேன். 9 ஓவர்களில் 52 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால், டக்வொர்த் முறையின் படி, 33 ஓவர்களில் 317 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த பார்ட்னர்ஷிப் ஜோடி நன்றாகவே ஆடியது. 13வது ஓவரில் இதையும் தகர்த்தெறிந்தது, அஸ்வினின் பௌலிங். 27 ரன்களுடன் லாபுஷேன் அவுட்டானர்.

அடுத்த 15வது ஓவரை அஸ்வின் வீச, வார்னரும் வம்படியாக அவுட்டாகி வெளியேறினார். 53 ரன்கள் அடித்த வார்னர், ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சித்து அவுட்டானார். ஆஸி., அணியின் 4 பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி நிலையில், ஸ்கோர் 100 ஆகவே இருந்தது. இதே ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட் விழ, இந்திய அணியின் வெற்றி தீர்மானமாகிவிட்டது. ஜோஷ் இங்கிலீஷின் விக்கெட்டையும் எடுத்தார் அஸ்வின். வெற்றி – தோல்வி என்பதைத் தாண்டி, கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆஸி., அணியின் பேட்டிங் ஸ்டைலை மிஸ் பண்ணவே மாட்டார்கள். அந்த அளவுக்கு அணியில் உள்ள எல்லோருமே டாப் கிளாஸ் பெர்பார்மென்ஸை கொடுக்கக் கூடியவர்கள். ஆனால், நடந்தது என்னவோ நேர்மாறாக தான். அடுத்து வந்த கேமரூன் கிரீன் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் பூச்சாண்டி காட்டிவிட்டு அடுத்த பேட்ஸ்மேன்களுக்கு வழிவிட்டனர்

Ashwin

அலெக்ஸ் கேரி 14 ரன்களிலும், கேமரூன் கிரீன் 19 ரன்களிலும் அவுட் ஆகினர். 21வது ஓவரில் ஆடம் ஜாம்பாவும் அவுட்டாகி வெளியேறினார். அப்போது, அணியின் ஸ்கோர் வெறும் 140 ரன்கள் தான். ‘கடைசியா தான் வந்தாரு விநாயக்.!’ என என்ட்ரி கொடுத்தார் ஆபோட். அக்மார்க் ஆஸி பிளேயரின் ஆட்டம் இப்படித்தான் இருக்கும் என அதிரடியை நிகழ்த்தினார். ஹேசல்வுட் மற்றும் ஆபோட் இருவரும் இணைந்து சிக்ஸர் பவுண்டரிகளாக வெளுத்து வாங்கினர். அதுவரை பிசுறே இல்லாமல் விளையாடி வந்த இந்திய அணிக்கு ஃபீல்டிங், பௌலிங் இரண்டிலும் சொதப்பல்கள். எங்கிருந்து ரன் வந்தது என்றே தெரியாத அளவிற்கு, 70 ரன்கள் பார்ட்னர்ஷிப். மிட்செல் ஜான்சன், ஜேம்ஸ் ஃபாக்னர் வரிசையில் “பௌலர்களும் பிளந்து கட்டுவது தான், ஆஸி அணியின் ட்ரேட் மார்க்” என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தனர். ஆனால், 28வது ஓவரில் ஹேசில்வுட் அவுட்டாகி விட, அடுத்த ஓவரிலேயே ஆபோட்டும் காலியானார். 28.2 ஓவர்களில் 217 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி, ஆல் – அவுட் ஆனது.

Jadeja

தொடர்ந்து இரண்டு வெற்றியைப் பெற்றதன் மூலம் இந்தத் தொடரைக் கைப்பற்றியிருக்கிறது, இந்திய அணி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.