ஜீ தமிழ் சேனலின் `தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் சமீபத்தில் ஒளிபரப்பான உணவுப் பழக்கம் தொடர்பான விவாதம் பெரிய பேசுபொருளாகியிருக்கிறது.
நிகழ்ச்சியில் சைவ உணவே சிறந்தது எனப் பேசிய ‘லொள்ளு சபா’ ஜீவாவின் பேச்சுக்கு ஏக எதிர்வினைகள். “அசைவ உணவைச் சாப்பிடுகிறவர்கள் எந்த விலங்கை உண்கிறார்களோ, அந்த உயிரினத்தின் தன்மையைப் பெற்றுவிடுவார்கள்” என அவர் பேசியதைத் தொடர்ந்து பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். அதற்கு அறிவியல்பூர்வ ஆதாரம் இருக்கிறதா எனக் கேட்டு சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
இந்தச் சூழலில் ஜீவாவிடமே பேசினோம்.
“நான் பேசிய விஷயத்துல இருந்து இப்பவும் பின்வாங்கப் போறதில்லை. நான் பேசியது சிலருக்குத் தெளிவாகப் புரியலைன்னு நினைக்கிறேன். ரொம்ப சிம்பிளா சொல்லணும்னா ‘நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்’ங்கிற வாக்கியம் கேள்விப்பட்டிருக்கீங்கதானே. அதேதான் நீ எதைச் சாப்பிடுகிறாயோ அந்த உணவின் குணங்கள் உனக்குள் வரும்கிறதுதான் என் கருத்து. இதுக்கு அறிவியல் ஆதாரம் கொண்டு வான்னு சொன்னா கொண்டு வர முடியாது.
நான் வள்ளலார் காட்டிய பாதையில் நின்னு உணர்ந்து இந்த விஷயத்தைச் சொல்றேன். நீங்க ஆன்மிகவாதி யார்கிட்டயாவது போய் இது சரியா தப்பான்னு கேட்டா, அவங்க சரின்னுதான் சொல்வாங்க. விதண்டாவாதம் பண்றவங்கதான் இதைக் கேலி கிண்டல் செய்வாங்க. செடி கொடிக்கும்தான் உயிர் இருக்கே, அதை ஏன் சாப்பிடுறீங்கனு கேட்பாங்க. செடி கொடிகளுக்கு மனிதனை மாதிரி ஆறறிவு இருக்கா என்ன?
என்னைப் பொறுத்தவரைக்கும் இப்பவும் சொல்றேன், அசைவ உணவுங்கிறது அசுத்தமானதுதான். இதைச் சொல்கிற நான் சைவ உணவுப் பரம்பரையும் கிடையாது. உணவுங்கிறதே உடல் நலனுக்கானதுதானே. எங்கே உடல்நிலை சரியில்லாத நேரத்துல யாரையாவது அசைவ உணவை எடுக்கச் சொல்லுங்களேன், பார்க்கலாம்?
உணவுங்கிறது தனிப்பட்ட மனிதனின் உரிமைங்கிறது இந்தத் தலைமுறை. இதையும் நான் ஏத்துக்கறேன். அதேநேரம் என் கருத்தை என் அனுபவத்துல இருந்து நான் சொன்னேன்.
நான் பேசிய அதே ஷோவுல அசைவ உணவுக்கு ஆதரவாகப் பேசிய ஒருத்தரும், ‘அத்லெட்ஸ் உடல் ரீதியா ஒரு க்ரிப் கிடைக்கும்னு பச்சைத் தவளைக் கறிச் சாப்பிடுவாங்க’ன்னு பேசினார்.
நான் பேசிய அதே கருத்தை, அதாவது எதைச் சாப்பிடுறோமோ, அந்த விலங்கின் தன்மை வந்துடும்னுதானே அவரும் பேசறார். அவர் சொன்னதை விட்டுட்டு என்னை மட்டும் விமர்சிக்கறது ஏன்னு தெரியலை…” என்றவரிடம், “காமராஜர் மக்கள் கட்சிப் பணி எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது?” எனக் கேட்டோம்.
“காமராஜர் பெயரில் மாணவப் பருவத்துல இருந்தே இயங்கிட்டு வந்துட்டிருக்கேன். தமிழருவி மணியன் அய்யா காமராஜர் பெயரில் இயக்கம் தொடங்கிய போது அதன் இளைஞரணித் தலைவர் பொறுப்பு வந்தது. ஆனா இப்ப எந்தவித அரசியல் தொடர்புலயும் நான் இல்லை. சில மாதங்களுக்கு முன் காமராஜர் மக்கள் கட்சியின் பொதுக்குழுவுல பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை கலந்துகிட்டாரே, அந்தப் பொதுக்குழுவுலயே கட்சியின் இளைஞரணித் தலைவரான நான் கலந்து கொள்ளவில்லை.
பளிச்னு சொல்லணும்னா ‘இவனும் சங்கிக் கூட்டத்துல ஒருத்தனா சேர்ந்துட்டான்’னு நினைக்கிற ஒரு கூட்டம்தான் இந்த உணவு விஷயத்துல என்னை விமர்சிச்சிட்டிருக்கு, ட்ரோல் பண்ணிட்டிருக்கு! நானே என் கட்சியில இல்லைங்கிற விஷயம் அவங்களுக்குத் தெரியல, பாவம். அதனால இந்தப் பேட்டி மூலமா அந்த விஷயத்தை நான் ஊருக்குச் சொல்லிக்க விரும்பறேன்.
காரணங்களைப் பொதுவெளியில விவாதிக்க விரும்பலை. தவிர, மணியன் அய்யா மீது மிகுந்த மரியாதை வச்சிருக்கேன். நாம இருந்த இடத்தைப் பத்தி அங்கிருந்து வெளியில் வந்த பிறகு விமர்சிச்சுப் பேசறைதையும் விரும்பறதில்லை நான்…” என முடித்துக் கொண்டார் ஜீவா.