புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளுக்கு வீட்டுக்கடன் பெறுவோருக்கு ரூ.60 ஆயிரம் கோடி வட்டி மானியம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, நடுத்தர மக்களுக்கு வீட்டுக்கடன் வட்டியில் மானியம் வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என அறிவித்தார். இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில், வீட்டுக்கடன் வட்டி மானிய திட்டம் தயாராகி விட்டதாகவும் மத்திய அமைச்சரவை இதற்கு விரைவில் ஒப்புதல் வழங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ரூ.60 ஆயிரம் கோடியில் இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த திட்டத்தால், நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் 25 லட்சம் குடும்பத்தினர் பயனடைவார்கள் எனத் தெரிகிறது.
ரூ.50 லட்சத்துக்கும் குறைவாக 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் வீட்டுக்கடன் பெறுவோர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி உடையவர்களாக இருப்பார்கள் எனத் தெரிகிறது. அதேநேரம், மொத்த கடனில் ரூ.9 லட்சத்துக்கு மட்டும் 3 முதல் 6.5 சதவீதத்துக்குள் வட்டி மானியம் வழங்கப்படும் எனத் தெரிகிறது. மீதம் உள்ள கடனுக்கு வங்கி விதிக்கும் வட்டியை வாடிக்கையாளரே செலுத்த வேண்டியிருக்கும்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஓரிரு மாதங்களிலும் மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்திலும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு கடந்த மாதம் 18% குறைத்தது. இந்நிலையில், வீட்டுக் கடன் வட்டி மானிய திட்டமும் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.