ஆசிய – பசுபிக் வலய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகாரிகளின் ஐந்தாவது கலந்துரையாடல் ஒக்டோபர் 03 – 06 வரை கொழும்பில்

பிராந்தியத்தின் சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான ஆசிய – பசுபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகாரிகளின் ஐந்தாவது கலந்துரையாடல் (UNEP) ஒக்டோபர் 03 – 06 திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளதென சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்தார்.

அதன் பிரதான அமர்வு ஒக்டோபர் 05 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளதோடு, ஐ.நா சுற்றாடல் நிகழ்ச்சி நிரல் மற்றும் சுற்றாடல் அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்யவுள்ள குறித்த நிகழ்வில் பிராந்தியத்தின் சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நாடுகள், அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்புக்கள் உட்பட ஏனைய தரப்புக்களுக்கும் வாய்ப்பளிக்கபடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இம்முறை கலந்துரையாடலில் ஆசிய பசுபிக் வலயத்தின் 41 நாடுகளின் அமைச்சர்கள், 300க்கும் அதிகமான வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் 100 க்கும் அதிகமான தொழில்வான்மையாளர்கள் பங்குபற்றுவர் என எதிர்பார்ப்பதாகவும், 2024 பெப்ரவரி 24 தொடக்கம் மார்ச் 01 ஆம் திகதி வரை நைரோபில் நடைபெறவிருக்கும் ஆறாவது ஐ.நா சுற்றாடல் சபையின் (UNEA) அமர்விற்கு இணையாக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க,

பிரதான கருத்தாடலுக்கு நிகராக ஆசிய – பசுபிக் இளையோர் சுற்றாடல் அமைப்பு, ஆசிய அமைதி வலயத்தின் பிரதான குழு மற்றும் பங்குதாரர்களின் அமைப்பு உட்பட சுற்றாடல் தொடர்பான ஆசிய அமைதிக்கான அறிவியல் கொள்கைகளுக்கான வர்த்தக அமைப்பு உள்ளிட்ட அமைப்புக்களின் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதெனவும் தெரிவித்தார்.

நிலையான பலதரப்புச் செயற்பாடுகளை கருத்தில் கொண்டு, காலநிலை அனர்த்தங்கள், உயிரியல் பல்வகைத்தன்மை அழிவு மற்றும் சுற்றாடல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வாய்ப்பாக அமையும் எனவும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

மேற்படி சவால்களுக்கு எதிராக தீர்வு காணும் உலகளாவிய முயற்சிகளுக்கு பங்களிப்புச் செய்யும் வகையில் ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் முன்னுரிமை அளிப்பதற்குமான களத்தை, அரசாங்கங்களுக்கும், அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்புக்களுக்கும், அமைத்துக்கொடுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டது.

சுற்றால் அமைச்சின் மேலதிக செயலாளர் அஞ்சலி குமாரகம, அமைச்சின் அனைத்துலக தொடர்பாடல் பணிப்பாளர் குலானி கருணாரத்ன உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.