ஹாங்சு: சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் பாய்மர படகு போட்டியில் இந்திய வீராங்கனை நேஹா தாகூர் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். குதிரையேற்றத்தில் இந்திய அணி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு கிடைத்த 3வது தங்கம் ஆகும்.
சீனாவின் ஹாங்சுவில் ஆசிய விளையாட்டு 19வது சீசன் நடக்கிறது. இதில் இந்தியா நேற்று (செப்.,25) வரை 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் 6வது இடத்தில் இருந்தது.
குதிரையேற்றம்
இன்று நடந்த குதிரையேற்ற போட்டியில் இந்திய அணி முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. சுதிப்தி ஹஜோனா, திவ்யகிருதி சிங், ஹரிதய் சேடா, அனுஷ் அகல்வாலா ஆகியோர் அடங்கிய இந்திய அணி குதிரையேற்றத்தில், 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்தது. இது இந்தியாவுக்கு கிடைத்த 3வது தங்கம் ஆகும். ஏற்கனவே, கிரிக்கெட்டில், துப்பாக்கிச்சுடுதலில் இந்திய அணி தங்கம் வென்றது.
வெள்ளி
இன்று நடந்த பாய்மர படகு போட்டியில் இந்தியாவின் நேஹா தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். ஆடவர் பிரிவில் ஏபர்ட் அலி வெண்கலம் வென்றார். இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 14 ஆனது.
ஜூடோ போட்டியில் மகளிர் 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் துலிகா மண், சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கல பதக்கத்திற்கான போட்டிக்கு முன்னேறினார். ண்கள் ஹாக்கி பிரிவில் சிங்கப்பூருக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 16-1 என அபார வெற்றி பெற்றது.
ஸ்குவாஷ் பிரிவில் இந்திய பெண்கள் அணி 3-0 பாகிஸ்தானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
துப்பாக்கிச்சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் ரமிதா, பன்வார் கலப்பு அணி, கொரிய அணியிடம் 18-20 என்ற கணக்கில் தோல்வி அடைந்து பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தது.
வாள் வீச்சு காலிறுதி போட்டியில் இந்தியாவின் பவானி தேவி, சீன வீராங்கனையிடம் தோற்று வெளியேறினார்.
டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 6-2, 6-1 என்ற நேர் செட்கணக்கில் ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
நீச்சல் போட்டியில் 4*100 மெட்லே ரிலே பிரிவில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்