1982ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில், குதிரையேற்ற பிரிவில் இந்தியா தங்கப் பதக்கங்களை வென்றது. இந்தியா முதல் முறையாக பங்கேற்றபோதும், சர்வதேச அரங்கில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. ரகுபீர் சிங், குலாம் முகமது கான், பிரஹலாத் சிங் போன்ற வீரர்கள் தனிநபர் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றனர். அணிக்கான போட்டியில் ரகுபீர் மற்றும் முகமது ஆகியோர் தங்கம் வென்றனர்.
இந்த போட்டிக்கு பிறகு குதிரையேற்ற பிரிவில் இந்தியா தங்கம் வென்றதில்லை. அந்த கனவு 41 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நிறைவேறியிருக்கிறது. ஆம், சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் சுதிப்தி ஹஜேலா, திவ்யகிருதி சிங், ஹிருதய் சேடா மற்றும் அனுஷ் அகர்வாலா ஆகியோர் கொண்ட இந்திய அணி தங்கம் வென்று உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இந்த சாதனையை நிகழ்த்திய பெருமைக்குரிய வீரர், வீராங்கனைகள் குறித்து பார்ப்போம்.
சுதிப்தி ஹஜேலா:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சுதிப்தி ஹஜேலா 10 வயதில் இருந்தே குதிரையற்ற பயிற்சி பெற்று வருகிறார். ஆரம்பத்தில் பொழுதுபோக்காக குதிரையேற்றத்தை தொடங்கிய அவர், தந்தையின் ஊக்கம் காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு தன்னை தயார்ப்படுத்தியிருக்கிறார்.
2022 ஆம் ஆண்டில் இவருக்கு மத்தியப் பிரதேச மாநில அரசு ‘விக்ரம்’ விருது வழங்கியது. 2020 ஆம் ஆண்டில், விளையாட்டில் சிறப்பான சாதனைக்காக ‘பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார்’ விருது பெற்றார்.
திவ்யகிருதி சிங்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் பிறந்த திவ்யகிருதி சிங், தேசிய அளவிலான போட்டிகள் மட்டுமின்றி பல்வேறு சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்காக குதிரையேற்ற போட்டிகளில் பங்கேற்றுள்ளார். குறிப்பாக, ஐரோப்பாவில் நடந்த பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
அனுஷ் அகர்வாலா
1999 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்த அனுஷ் அகர்வாலா, 8 வயதில் குதிரையேற்ற பயிற்சி பெறத் தொடங்கினார். முதலில் குழந்தைகளுக்கான உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். பின்னர் குதிரையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தை அடையவதற்காக, 11 வயதில், டெல்லிக்கு செல்லத் தொடங்கினார். பள்ளியில் படிக்கும்போது, வார இறுதி நாட்களில் பயிற்சிக்காக டெல்லிக்கு விமானத்தில் செல்லத் தொடங்கினார். இந்த பயிற்சி அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. இந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கிறார்.
ஹிருதய் சேடா
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்த ஹிருதய் சேடா, தனது 6 வயதில் முதல் முறையாக குதிரையில் அமர்ந்துள்ளார். அதன்பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பயிற்சி பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அவர் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் பயிற்சி பெற்று பணியாற்றியுள்ளார்.