மதுரை: தமிழகத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிலையில், அதிமுகவினருக்கு எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது என பாஜக நிர்வாகிகளை கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி முதன்முறையாக 1998 மக்களவைத் தேர்தலில் உருவானது. அந்தக் கூட்டணி ஓராண்டு மட்டுமே நீடித்தது. மீண்டும் 2004 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. அந்தத் தேர்தலில் தோல்வியே கிடைத்தது. இதனால், இனிமேல் பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என அப்போதைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்பிறகு ஜெயலலிதா மறையும் வரை எந்தத் தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கவில்லை. தமிழகத்தில் 2014-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பிரச்சாரங்களில் பிரதமர் மோடியை ஜெயலலிதா கடுமையாக விமர்சனம் செய்தார். அந்தத் தேர்தலில் அதிமுக பெரியளவில் வெற்றி பெற்றது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2019 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி உருவானது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணி தொடர்ந்தது. இவ்விரு தேர்தல்களிலும் தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வியைச் சந்தித்தது. தமிழத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அப்போது அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி ஒரே தலைமையாக உருவெடுத்தார். அதன்பிறகு அதிமுக, பாஜக இடையே அவ்வப்போது விரிசல் ஏற்பட்டு வந்தது.
பல முறை இரு கட்சித் தலைவர்களும் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். உச்சக்கட்டமாக ஜெயலலிதா குறித்தும், அண்ணா குறித்தும் அண்ணாமலை முன்வைத்த கருத்துகள் அதிமுகவில் கொந்தளிப்பை உருவாக்கியது. இதனால், பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றும் முயற்சியில் அதிமுக தலைவர்கள் ஈடுபட்டனர். அதற்கு பாஜக மேலிடம் ஒப்புக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.
இந்தச் சூழலில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும், மக்களவைத் தேர்தலில் மட்டுமல்ல, அடுத்து நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது பாஜகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கூட்டணி முறிவு குறித்து தமிழக பாஜக தலைவர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் உள்ளனர். அண்ணாமலையிடம் கேட்டதற்கு, கட்சி மேலிடம்தான் பதில் சொல்லும் எனக் கூறிவிட்டார். அதேநேரத்தில் தமிழக பாஜகவின் முன்னாள் மேலிட பார்வையாளர் சி.டி.ரவி, ‘அடுத்த 8 மாதங்களில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்’ எனக் கருத்து தெரிவித்துள்ளார். பாஜக மேலிடத் தலைவர்கள், எடப்பாடி பழனிச்சாமியை சமாதானப்படுத்தி கூட்டணியில் தொடர வைக்கும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது.
அதேநேரத்தில் அதிமுக – பாஜக கூட்டணி முறிவை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். சில இடங்களில் பாஜகவினரும் பட்டாசு வெடித்துள்ளனர். சமூக வலைதளங்களில் அதிமுகவினரும், பாஜகவினரும் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கூட்டணி விவகாரத்தில் அதிமுகவினருக்கு எதிராக எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கக் கூடாது என பாஜகவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜகவின் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் பேசியுள்ளார்.
அப்போது அவர், ‘கூட்டணி விஷயத்தில் அதிமுகவினருக்கு எதிராக பாஜகவினர் கருத்து தெரிவிக்கக் கூடாது. பேட்டி கொடுக்கக் கூடாது. எது நடந்தாலும் பேசாமல் அமைதியாக இருந்து கட்சிப் பணி செய்ய வேண்டும். கூட்டணி குறித்து வெளிப்படையாகவும், சமூக வலைதளங்களிலும் கருத்து தெரிவிக்கக் கூடாது’ எனக் கூறியுள்ளார். இதையடுத்து பாஜக நிர்வாகிகள் அமைதி காக்கத் தொடங்கியுள்ளனர்.