இந்திய அளவில் உறுப்பு தான திட்டத்தில் சிறப்பான செயல்பாட்டுக்காகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டுக்கு `State Organ and Tissue Transplantation Organization’ (SOTTO) என்ற விருது கடந்த மாதம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இறக்கும் முன்பு உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்’ என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இது குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கிவருகிறது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியிருக்கிறது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன்பு உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்” என்று அதிகாரபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பு மக்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரில் உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் வடிவேலுவுக்கு இன்று அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறுகிறது. இந்த இறுதி சடங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொள்ள உள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற சாலை விபத்தில் வடிவேலு மூளைச்சாவு அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் அவரின் உடல் உறுப்பு தானம் வழங்கப்பட்டது.