செலிபிரிட்டீஸ் எது செய்தாலும் வைரல் விஷயமாகி விடுகிறது. அதுவும் ‘தல’ தோனி தண்ணீர் குடித்தாலே ரசிகர்கள் குதூகலமாகி விடுவார்கள். அதை ஷேர் செய்து நெட்டில் பிஸியாகி விடுவார்கள். அப்படித்தான் தோனி நடுரோட்டில், தனது மக்கரான RD350 பைக்கை கிக்கர் மூலம் ஸ்டார்ட் செய்து கிளம்பும் வீடியோ கொஞ்ச நாள்களுக்கு முன்பு செம வைரல் ஆனது. ‘‘தோனி கால் வெச்சா மக்கர் பண்ற பைக் கூட வேலை செய்யும்’’ என்று தோனி ரசிகர்கள் பொங்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதேபோன்று தோனி எதேச்சையாகச் செய்த செயல் ஒன்று, நெட்டிசன்கள் மத்தியில் பெரிய விழிப்புணர்வு வைரல் கன்டென்ட் ஆகி வருகிறது. ஒன்றுமில்லை பாஸ்; மும்பை விமான நிலையத்தில் இருந்து செம மாஸாக வெளியே வரும் தோனி, வாசலில் காத்திருக்கும் தனது மெர்சிடீஸ் பென்ஸ் GLS எனும் எஸ்யூவியின் கோ–டிரைவர் சீட்டில் அமர்கிறார். அடுத்த நொடி, எதுவும் யோசிக்காமல் சட்டென்று சீட் பெல்ட்டை மாட்டிவிட்டு டிரைவரிடம் வண்டியைக் கிளப்பச் சொல்கிறார்.
விஷயம் இதுதான்; ‘தோனி எது செய்தாலும் அதில் லட்சம் அர்த்தங்கள் இருக்கும்; அவர் என்றைக்குமே லீடர்தான்’ என்று தோனி ரசிகர்கள் என்ஜாய் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். அதாவது, ஆட்டோமொபைல் ஆர்வலரான தோனி, இதன் மூலம் சீட் பெல்ட் போட்டுவிட்டுத்தான் பயணிக்க வேண்டும் என்பதைச் சொல்கிறார் என்று வலைதளங்களில் வைரல் கன்டென்ட்களாக இறக்கிக் கொண்டிருக்கின்றனர்.
‘‘எங்க தல செலிபிரிட்டியா இருந்தாலும், சீட் பெல்ட் போடத் தயங்குறதில்லை!’’
‘‘கறுப்பு டீ–ஷர்ட் கசங்கினாலும் கவலைப்படாமல் சீட் பெல்ட் போடும் ‘தல’யின் பொறுப்புணர்வு வேற லெவல்!’’ என்கிற ரீதியில் தோனியே வெட்கப்படும்படி விழிப்புணர்வு கமென்ட்களைச் சொல்லி வருகின்றனர்.
தோனியின் விழிப்புணர்வு விஷயம் பாராட்ட வேண்டியதாக இருந்தாலும், பென்ஸ் போன்ற காஸ்ட்லி கார்களில் சீட் பெல்ட் போடவில்லை என்றால், செம அலெர்ட் கொடுக்கும். இது சொகுசு கார்கள் என்றில்லை; சில நார்மலான கார்களிலேயே கோ–டிரைவர் சீட்டில் இருப்பவர் சீட் பெல்ட் அணியவில்லை என்றால்… ‘கிய்யா…மிய்யா’ என்று அலறி நம்மை சீட் பெல்ட் போட வைக்காமல் விடாது. இருந்தாலும், தோனி போன்ற செலிபிரிட்டிகள் இதுபோன்ற விழிப்புணர்வு விஷயங்களைத் தங்களுக்குத் தெரியாமலே செய்வது நல்ல விஷயம்.
இதற்கும் ஓர் உதாரணம் சொல்கிறார்கள். அண்மையில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண், தனது ஃபோர்டு எண்டேவர் காரின் சன்ரூஃபில் அமர்ந்தபடி பயணம் செய்து… கூடவே எக்கச்சக்க பாடிகார்டுகளை ஓடும் காரிலேயே ஃபுட்போர்டு அடிக்க வைத்துப் பயணம் செய்ததும் வைரலாகப் போனது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Pawan_Kalyan.jpg)
அதில் கலந்து கொண்ட பவன் கல்யாணின் தொண்டர்கள் பலர், ஹெல்மெட் போடாமல் அதிவேகத்தில் டூ–வீலர் ஓட்டியது; ட்ரிப்பிள்ஸ் அடித்தது; ‘எங்க தலைவரே ரூஃப்ல வர்றாரு… எங்களுக்கு எதுக்கு சீட்பெல்ட் சேஃப்டி?’ என்று தங்கள் தலைவரை முன்னுதாரணம் காட்டிப் பயணித்ததும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
தோனி எதேச்சையாகச் செய்த நல்ல விஷயமும்… நடிகர் வேண்டுமென்றே செய்த சேட்டையான விஷயமும் சிங்க் ஆகுது பாருங்க! அங்க இருக்கு கோ–இன்சிடென்ஸ்!