நாகோர்னோ-கராபக்: அசர்பைஜான் நாட்டின் ஒரு பகுதியான நகோர்னோ-கராபக் பகுதியில் எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 300 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அசர்பைஜான் நாட்டின் ஓர் அங்கமாக உள்ள பகுதி நகோர்னோ-கராபக். எனினும், இந்தப் பகுதியை கடந்த 1994 முதல் தனி நாடாக அறிவித்து பிரிவினைவாதிகள் அந்தப் பகுதியை ஆட்சி செய்து வருகிறார்கள். பிரிந்த பிராந்தியத்தின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எரிவாயு நிலைய வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 290 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை மோசமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகோர்னோ-கராபக் பகுதியின் தலைநகரான ஸ்பெடனாகெர்ட்-ன் புறநகர் பகுதியில் இந்த வெடிவிபத்து நேரிட்டுள்ளது. நாகோர்னோ-கராபக் பகுதி முழுவதற்கும் உரிமை கோரி வரும் அசர்பைஜான், கடந்த வாரம் தீவிர ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் காரணமாக நாகோர்னோ-கராபக் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடான அர்மீனியாவுக்கு அகதிகளாக சென்றனர். இந்நிலையில், இந்த வெடிவிபத்து நேரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.