மதுரை: தினமும் 750 வாகனங்களில் கனிமம் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டம் இளஞ்சிறையைச் சேர்ந்த பினோய், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடக்கும் அரசு மற்றும் தனியார் பணிகளுக்கு கிராவல், ஜல்லிகற்கள், எம்.சாண்ட் குவாரி தூசி மற்றும் மணல் சப்ளை செய்யும் ஒப்பந்தம் பெற்றுள்ளோம். கேரளாவில் கனிமங்கள் எடுக்க அனுமதி இல்லை. இதனால் ஜிஎஸ்டி நடைசீட்டு உள்ளிட்ட உரிய அனுமதியுடன் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு கனிமங்கள் கொண்டு செல்கிறோம்.
10 சக்கரத்திற்கு மேல் உள்ள வாகனங்களில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதித்து குமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால், தமிழ்நாட்டில் இருந்து 10 சக்கரத்திற்கு அதிகமான லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பலவகையான கட்டுமானப் பணிகள் பாதித்துள்ளன. எனவே, அந்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். பின்னர் நீதிபதி, 10 சக்கரத்திற்கு மேற்பட்ட 750 லாரிகளில் தினமும் கனிமங்கள் கொண்டு செல்லலாம் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.