புதுடெல்லி: ஜி20 மாநாடு நடைபெற்ற பாரத் மண்படத்தின் முன்பகுதியில் நிறுவப்பட்ட உலகின் மிகப் பெரிய நடராஜர் சிலையை வடித்த தமிழகத்தின் சுவாமிமலையைச் சேர்ந்த சிற்பி ராதா கிருஷ்ணன் டெல்லியில் கவுரவிக்கப்பட்டார்.
தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு ஏற்ப புதுடெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பாரத் மண்டபத்தின் முகப்பில் உலகின் மிகப் பெரிய பிரம்மாண்ட நடராஜர் சிலை நிறுவப்பட்டது. இந்தச் சிலையை தமிழகத்தின் சுவாமிமலையைச் சேர்ந்த சிற்பி ராதா கிருஷ்ண ஸ்தபதி தலைமையிலான குழுவினர் வடித்துத் தந்தனர். இந்த சிலை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து, சிலையின் தத்துவம் குறித்த விவரங்கள் பேசுபொருளாகின.
பாரத் மண்டபத்தில் நடராஜர் சிலையை நிறுவுவதில் இந்திரா காந்தி தேசிய கலை மையம் முக்கியப் பங்கு வகித்தது. இந்தப் பின்னணியில், இளைய தலைமுறையினருக்கு ‘நடராஜர்’ பற்றிய புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் புதுடெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் “நடராஜர்: பிரபஞ்ச சக்தியின் வெளிப்பாடு” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நடராஜர் சிலையை உருவாக்கிய ராதாகிருஷ்ண ஸ்தபதி உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
இதில், பத்ம பூஷண் விருது பெற்ற டாக்டர் பத்மா சுப்பிரமணியம், பத்ம விபூஷண் விருது பெற்ற டாக்டர் சோனல் மான்சிங் (எம்.பி. மாநிலங்களவை), மத்திய கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் கோபிந்த் மோகன், நடராஜர் சிலையை உருவாக்கிய ராதாகிருஷ்ண ஸ்தபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய பத்மா சுப்பிரமணியம், பிரபஞ்சத்தின் வெளி, பருப்பொருளும் ஆற்றலும் கலந்தது. சிதம்பரத்தில் உள்ள ‘நடராஜர்’ சந்நிதியில் அமைந்துள்ள நடராஜர் சிலை ‘ரூப’ வழிபாடு (உருவ வழிபாடு) மற்றும் ‘அருப’ வழிபாடு (உருவமற்ற வெளி வழிபாடு) ஆகியவற்றின் கலவை என குறிப்பிட்டார். மேலும், ‘நடராஜரின்’ பல்வேறு அம்சங்கள் குறித்தும் விளக்கினார்.
விழாவில் உரையாற்றிய மத்திய கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் கோவிந்த் மோகன், பாரத் மண்படத்தில் நிறுவப்பட்டுள்ள நடராஜர் சிலையை உருவாக்கும் பணி மிகவும் சவால் மிகுந்தது. உலகின் மிகப் பெரிய இந்த நடராஜர் சிலையை செய்வதற்கு 30 மாதங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆறே மாதங்களில் சிலை உருவாக்கப்பட்டது. ‘நடராஜர்’ தான் இந்த மகத்தான பணியை முடிப்பதில் உத்வேகம் அளித்தார்.
உலகின் மிக உயரமான இந்த ‘நடராஜர்’ சிலையை தமிழ்நாட்டின் சுவாமி மலையைச் சேரந்த ஸ்தபதி ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினர் சிற்ப சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் மற்றும் அளவீடுகளைப் பயன்படுத்தி, கி.பி 9 ஆம் நூற்றாண்டு முதல், சோழர் காலத்திலிருந்து நடராஜர் தயாரிப்பில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய மெழுகு வார்ப்பு செயல்முறையைப் பயன்படுத்தி உருவாக்கினர் என்று கூறினார். உலக அளவில் புகழ்பெற்றுள்ள நடராஜர் சிலையை உருவாக்கிய ராதா கிருஷ்ண ஸ்தபதி, இவ்விழாவில் கவுரவிக்கப்பட்டார்.