Doctor Vikatan: என் வயது 42. நான் திருப்பூரில் பிரின்டிங் பிரஸ் வைத்து நடத்தி வருகிறேன். எனக்கு உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் இருக்கிறது. இதற்காக நடைப்பயிற்சி செய்யும் போதும், வேறு சாதாரண கடினமில்லாத வேலைகள் செய்யும் போதும் மேல் முதுகின் நடுவில் மிகக் கடுமையான வலி ஏற்படுகிறது. பிறகு அந்த வலி பரவி முன் நெஞ்சுப் பகுதிக்கு வருகிறது. அந்த வலி வாய்வு பிடித்த வலியைப் போல் இருக்கும்.
ECG, Echo test, முதுகுத்தண்டுக்கான முழுமையான MRI scan எடுத்துப் பார்த்துவிட்டேன். மருத்துவர் பரிந்துரை செய்த மாத்திரைகளைத் தவறாமல் எடுத்த பிறகும் அந்த வலி சிறிதளவும் குறையவில்லை. இரவில் படுக்கும் போது தூங்கவிடாமல் அந்த வலி மிக அதிகமாக இருக்கிறது. பெரியவர் ஒருவரின் ஆலோசனையில் வேக வைத்த பூண்டு சாப்பிட்டு சுடுநீர் குடித்தேன். வலி கொஞ்சம் கட்டுப்பட்டது. ஆனாலும் அவ்வப்போது நடக்கும்போதும் வேறு வேலைகள் செயயும் போதும் அந்த வலி வருகிறது.
எனக்கு என்ன பிரச்னை? நான் எந்த மருத்துவரை அணுகுவது?
– Periyasamy. விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/WhatsApp_Image_2021_11_06_at_1_14_01_PM.jpeg)
42 வயதில் ரத்த அழுத்தமும் கொலஸ்ட்ரால் பாதிப்பும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். சாதாரண வேலைகளைச் செய்யும்போதும் வலியை உணர்வதாகச் சொல்கிறீர்கள். மருத்துவராக இதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுக்கு இதயநோய் இருப்பதற்கான ரிஸ்க் அதிகமிருப்பதாகத் தெரிகிறது.
சிறுசிறு வேலைகள் செய்யும்போதும் வலி ஏற்படுவதாகச் சொல்வதை அலட்சியப்படுத்த முடியாது. இசிஜி, எக்கோ, எம்ஆர்ஐ உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனைகளையும் எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். எக்கோ நார்மல் என்று காட்டியதால் மட்டுமே இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களிலும் எந்தப் பிரச்னையும் இல்லை என எடுத்துக்கொள்ள முடியாது.
சிலருக்கு நடக்கும்போது வலி இருக்கும்… அது முதுகுவலியாகவோ, நெஞ்சுவலியாகவோ எதுவாகவும் இருக்கலாம். நடப்பதை நிறுத்தியதும் வலி குறைவதை உணரலாம். இதுவும் இதயநோயின் அறிகுறியாக இருக்கக்கூடும். இசிஜி டெஸ்ட் நார்மல் என்று காட்டினாலும் அடுத்தகட்டமாக டிரெட்மில் டெஸ்ட் செய்து பார்ப்பது அவசியம்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/heartbeat_163709_1280.jpg)
அப்போதும் மேற்குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை உணர்கிறீர்கள் என்றால் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டியிருக்கலாம். எனவே இந்த விஷயம் தாமதப்படுத்தவோ, அலட்சியப்படுத்தவோ கூடியதல்ல. உடனடியாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை மற்றும் சிகிச்சைகளைப் பெறுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.