சென்னை: மாதா அமிர்தானந்தமயி தேவிக்கு 2023-ம் ஆண்டுக்கான அமைதி மற்றும் பாதுகாப்புக்கான உலகத் தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளதற்காக, அவருக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.
‘அம்மா’ என்று அழைக்கப்படும் மாதா அமிர்தானந்தமயி தேவிக்கு, பாஸ்டன் குளோபல் ஃபோரம் (பிஜிஎஃப்) மற்றும் மைக்கேல் டுகாகிஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் லீடர்ஷிப் அண்ட் இன்னோவேஷன் (எம்டிஐ) ஆகிய சர்வதேச அமைப்புகள் 2023-ம் ஆண்டுக்கான அமைதி மற்றும் பாதுகாப்புக்கான உலகத் தலைவர் விருதைவழங்கி கவுரவித்துள்ளன.
உலக அமைதி, ஆன்மிகம் மற்றும் கருணை ஆகியவற்றில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அவரது ஆழ்ந்த ஆன்மிகம், அர்ப்பணிப்பு மற்றும் செல்வாக்குமிக்க உலகளாவிய தலைமை ஆகியவை அவருக்கு இந்த மதிப்புக்குரிய பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளன.
இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின்போது, ஜி-20 சிவில் சமூகத் தலைவர்களை உள்ளடக்கிய சிவில் 20 குழுவின் தலைவராகப் பணியாற்றிய அம்மா, `நீங்கள்தான் வெளிச்சம்’ என்ற ஜி-20 பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் கடந்த ஜூலை 31-ம் தேதி, அவருக்கு இந்த விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விருது பெற்றதற்காக அம்மாவை கவுரவிக்க வரும் அக். 3-ம் தேதி அவரது 70-வது பிறந்தநாள் விழா மற்றும் நவம்பர் 2-ம் தேதி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கிழக்கு லோப் ஹவுஸில் சிறப்பு மாநாடு ஆகிய 2 நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில் அவர் உரையாற்றுகிறார்.