கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி நிஜாரை நோக்கி 50 குண்டுகள் சுடப்பட்டன: குருத்வாரா உறுப்பினர்கள் தகவல்

வாஷிங்டன்: காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் மீது சுமார் 50 குண்டுகள் சுடப்பட்டதாக, குருத்வாரா உறுப்பினர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா பகுதியில் உள்ள குரு நானக் சீக்கிய குருத்வாராவில் கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலை சம்பவம் தொடர்பாக, 90 வினாடிகள் வீடியோ ஒன்றை குருத்வாரா வெளியிட்டுள்ளது.

அதில் நிஜாரின் வாகனம், குருத்வாராவின் பார்க்கிங் பகுதியில் இருந்து வெளியே வந்தபோது, அதன் அருகில் வெள்ளை நிற கார் ஒன்று இணையாக செல்கிறது. குல்லாவுடன் கூடிய ஸ்வெட்டர் அணிந்திருந்த இரண்டு பேர், காத்திருப்போர் பகுதியில் இருந்து வந்து நிஜாரின் காரை நோக்கி சென்றனர். இருவரும் துப்பாக்கியால், டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த ஹர்தீப் சிங் நிஜார் மீது சரமாரியாக சுட்டனர். அப்போது அருகில் சென்ற வெள்ளை நிற கார் பார்க்கிங் பகுதியில் இருந்து வெளியேறி சென்றது. அந்த கார் சென்ற திசையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் ஓடினர்.

இச்சம்பவத்தை முதலில் பார்த்த குருத்வாரா தொண்டர் புபிந்தர் சிங், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, ‘‘துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் சுமார் 50 குண்டுகள் சுட்டனர். இவற்றில் 34 குண்டுகள் நிஜார் உடலில் பாய்ந்தன. நான் நிஜாரின் கார் கதவை திறந்தபோது, அவர் சரிந்தார். அவர் உயிருடன் இல்லை’’ என்றார்.

குருத்வாரா கமிட்டியின் மற்றொரு உறுப்பினர் மல்கித் சிங் அளித்த பேட்டியில், ‘‘துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரும் அருகில் உள்ள கோகர் பார்க் நோக்கி சென்றனர். நான் அவர்களை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றேன். சீக்கியர்கள் போல் உடையணிந்தவர்கள், தாடியுடன் கூடிய முகத்தில் முககவசமும் அணிந்திருந்தனர். அவர்கள் அங்கு காத்திருந்த சில்வர் நிற காரில் ஏறி தப்பிச் சென்றனர். அந்த காரில் மேலும் 3 பேர் காத்திருந்தனர். சம்பவம் நடந்த 20 நிமிடங்களுக்கு பிறகு அங்கு போலீஸ் அதிகாரிகள் வந்தனர். இந்த கொலை தொடர்பாக விசாரணை அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை’’ என்றார்.

தீவிரவாதிகளின் புகலிடம்: இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சாப்ரே கூறியதாவது: சில தீவிரவாதிகள் கனடாவை தங்களுக்கு பாதுகாப்பான நாடாக கருதுகின்றனர். இந்நிலையில், கனடா பிரதமர் எவ்வித ஆதாரமும் இல்லாமல் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

இப்படித்தான் இதற்கு முன்பு இலங்கை அரசு இனப்படுகொலை செய்தது என கனடா குற்றம்சாட்டியது. இதனால் இலங்கை, கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.