ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லை தாண்டிய ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட தீவிரவாதி மற்றும் அவருக்கு உதவிய 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பாரமுல்லா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அமொத் நாக்புரே கூறியுள்ளதாவது: ஜன்பாஸ்போரா பாரமுல்லாவில் வசிக்கும் யாசீன் அகமது ஷா திடீரென தலைமறைவானது நம்பத்தகுந்த ஆதாரங்கள் மூலம் போலீஸாருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் யாசீன் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய இயக்கத்தில் சேர்ந்தது தெரியவந்தது. வாகன சோதனைச் சாவடியில் நடைபெற்ற சோதனையின்போது தலைமறைவாக இருந்த யாசீன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து, கைத்துப்பாக்கி, ஆயுதங்கள், சீன கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானில் உள்ளதீவிரவாதிகளின் உத்தரவின் பேரில் எல்லை தாண்டி ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கடத்தும் பணியில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் இந்த ஆயுத கடத்தலுக்கு உதவிய நிஜீனா, ஆயத்என்ற ஆப்ரீனா ஆகிய 2 பெண்கள்உட்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.