வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கு 75,000 டன் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய, அரசு அனுமதி அளித்துள்ளதாக, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.ஜி.எப்.டி., எனப்படும் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
அரிசி ஏற்றுமதிக்கான தடை இருந்தபோதிலும், நட்பு நாடுகளின் அத்தியாவசிய உணவு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், நம் நாடு, அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி அளித்து வருகிறது. அதனடிப்படையில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் வாயிலாக 75,000 டன் பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும், பூட்டானுக்கு 79,000 டன், மொரீஷியசுக்கு 14,000 டன், சிங்கப்பூருக்கு 50,000 டன் வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்யவும் அரசு அனுமதித்துள்ளது.
முன்னதாக, செனகல் நாட்டிற்கு 5 லட்சம் டன், காம்பியாவிற்கு 5 லட்சம் டன், இந்தோனேசியாவிற்கு 2 லட்சம் டன், பூட்டானுக்கு 48,804 டன் உடைந்த அரிசியை ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
சில்லரை விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டு வினியோகத்தை அதிகரிக்கவும், மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 9ல் உடைந்த அரிசி ஏற்றுமதிக்கும், கடந்த ஜூலை மாதம், பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கும் தடை விதித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement