சென்னை: குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.150 கோடியில் 37 மாவட்டங்களில் 1000 புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கிராம ஊராட்சிகளுக்கு இணையவழி வரி, கட்டணங்கள் செலுத்தும் வசதியை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.800 கோடியில் 6 ஆயிரம் புதியவகுப்பறைகள் கட்டப்படும் என்றுசட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ்முதல்வர் முக..ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டம் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் என கிராமப்புறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.150 கோடி செலவில் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 1000 புதிய வகுப்பறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இக்கட்டிடங்கள் உயர்த்தப்பட்ட மேற்கூரை, விசாலமான தாழ்வாரம், காற்றோட்டமிக்க ஜன்னல் வசதிகள், வழுக்காத தரைகள், கற்றலை ஊக்குவிக்கும் சுவர் ஓவியங்கள், வாழ்க்கைப் பாடங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்தும் வசதி: பொதுமக்கள் கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், வரியல்லாத கட்டணங்கள் போன்றவற்றை இணைய வழியில் செலுத்தும் வகையில் தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்டுள்ள https://vptax.tnrd.tn.gov.in/ என்ற வரி செலுத்தும் முனையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம், இணையவழி,ரொக்கம் மற்றும் கடன் அட்டைகள், யுபிஐ வாயிலாக வரி மற்றும் கட்டணங்களை பொதுமக்கள் எளிதாகஎந்த நேரத்திலும் செலுத்த முடியும்.
இதன் மூலம், ஊராட்சிப் பணியாளர்களின் பணிச்சுமை பெருமளவு குறைவதுடன், கிராம ஊராட்சியின் பொறுப்புணர்வும், வெளிப்படைத்தன்மையும் உறுதி செய்யப்படும். மேலும், பெறப்படும் வருவாய் மூலம் கிராம ஊராட்சியின் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த இயலும்.
கிராம ஊராட்சிகள் தற்போது ஊராட்சியின் பொதுநிதி, மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம், அரசின் திட்டப் பணிகள் போன்ற பல்வேறு பொறுப்புகளை மேற்கொள்ள 11 வகையான கணக்குகளை பராமரித்து வருகின்றன. இது கடினமான செயல்பாடாக உள்ளதால், அதனை எளிமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு எளிமைப்படுத்தபட்ட ஊராட்சிக் கணக்குகள் திட்டத்தை உருவாக்கி, 3 கணக்குகளை மட்டுமே பராமரிக்கும்வசதி இந்தியன் வங்கியின் ஒத்துழைப்புடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடுஎளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சிகள் கணக்குகள் திட்டத்தின் ‘TNPASS’ என்ற புதிய இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அன்பில் மகேஸ்பொய்யாமொழி, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா, ஊரகவளர்ச்சித்துறை செயலர் ப.செந்தில்குமார், இயக்குநர் பா.பொன்னையா, இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் எம்.கே.பஜாஜ், மாநில தகவலியல் அலுவலர் சி. ஜே. அந்தோணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.