ஸ்பான்சர் விசா மூலம் இந்திய இளைஞர்களை அழைத்துச் சென்று கனடாவில் காலிஸ்தான் படையை உருவாக்க முயற்சி: விசாரணையில் புதிய தகவல்கள்

புதுடெல்லி: இந்திய அரசால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் (45) கனடாவில் கடந்த ஜூன் 18-ம்தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காலிஸ்தான் தீவிரவாதிகள் ஸ்பான்சர் விசாக்கள் மூலம் இந்திய இளைஞர்களை மூளைச்சலவை செய்து கனடாவுக்கு அழைத்துச் சென்று காலிஸ்தான் படையை உருவாக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து உளவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் வேலை இல்லாமல் பரிதவித்து வரும் இளைஞர்களைக் குறிவைத்து அவர்களுக்கு மூளைச் சலவை செய்யும் பணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தவித செலவும் வைக்காமல் ஸ்பான்சர் விசாக்களை தயார் செய்து, கனடாவுக்கு அழைத்துச் சென்று குருத்வாராக்களில் பணி, நடுத்தர திறன் படைத்த வேலை போன்றவற்றில் காலிஸ்தான் தீவிரவாதிகள் சேர்த்து விட்டுள்ளனர்.

இதன்மூலம் கனடாவில் காலிஸ்தான் ஆதரவுப் படையை உருவாக்க காலிஸ்தான் தீவிரவாதிகள் முயன்று வருகின்றனர்.

இந்திய உளவுத்துறை ஆதாரங்களின்படி, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் அங்கு தங்கி வாழ்க்கைநடத்துவதற்காக குருத்வாராக்களின் வேலைக்குச் சேர்த்துவிட்டுள்ளனர். அவர்களுக்கு வசதியான தங்குமிடம் மற்றும் குறைந்த அளவிலான வேலைகளை வழங்குதல் போன்றவற்றை செய்துள்ளனர்.

இவர்களை கனடாவின் சர்ரே,பிராம்ப்டன், எட்மண்டன் போன்றபகுதிகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவு சக்திகளால் கட்டுப்படுத்தப்படும் 30-க்கும் மேற்பட்ட குருத்வாராக்களில் சேர்த்து விட்டுள்ளனர். அவர்கள் அங்கு பல்வேறு சேவை வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களை பிரிவினைவாத இயக்கத்தில் சேர்த்து, இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களை நடத்தவும், கனடாவில் தீவிர மதவாத கூட்டங்களை நடத்தவும் பயன்படுத்தியுள்ளனர்.

இதுபோன்ற இளைஞர்கள் கனடாவை அடைந்தவுடன் காலிஸ்தான் சார்பு நடவடிக்கைகளுக்காக அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

கனடாவில் காலிஸ்தான் ஆதரவுக்கு ஆட்கள் பற்றாக்குறை இருப்பதை சரிகட்டும் வகையில், கனடாவைச் சேர்ந்த சில ஏஜென்சிகள் இந்த மனித கடத்தல் வேலையை செய்து வருகின்றன.

காலிஸ்தான் ஆதரவு இயக்கங்கள் மீதான கனடா அரசின் மென்மையான போக்கின் காரணமாக அவர்கள் அங்கு அதிக வளர்ச்சி பெற்று வருகின்றனர். மேலும் கனடாவில் வசிக்கும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தோரை மிரட்டுவதற்கும், அங்குள்ள குருத்வாராக்களை சேதப்படுத்துவதாக அச்சுறுத்துவதற்கும் இளைஞர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளாகவே கனடா மண்ணில் தீவிரவாத, பிரிவினைவாத நடவடிக்கைளில் காலிஸ்தான் ஆதரவு சக்திகள் ஈடுபட்டு வருகின்றன. 1985-ல் கனிஷ்கா விமான தாக்குதல் நடத்தப்பட்டதும் இப்படித்தான். இந்த தீவிரவாத சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி தல்விந்தர் சிங் பார்மரும், அவரது கூட்டாளிகளுடன் தண்டனையின்றி தப்பிவிட்டனர். இது அனைத்தும் கனடா அரசின் ஆதரவால்தான்.

கனடாவிலுள்ள சில ஏஜென்சிகள் மூலம், மனிதக் கடத்தல் எந்தவித தடையுமின்றி நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.