வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராஜ்கோட்: 3-வது ஒரு நாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி தொடரை 2-0 என கைப்பற்றிவிட்டது. மூன்றாவது போட்டி குஜராத்தின் ராஜ்கோட்டில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், மிட்சல் மார்ஷ் ஜோடி அபார துவக்கம் தந்தது. இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த இருவரும் அரை சதம் விளாசினர். இவர்களை பிரிக்க முடியாமல் பவுலர்கள் திணறினர். ஒருவழியாக, பிரசித் கிருஷ்ணா ‘வேகத்தில்’ வார்னர் (56) ஆட்டமிழந்தார். மிட்சல் மார்ஷ் 96 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித் அரை சதம் கடந்தார். இவர் சிராஜ் பந்துவீச்சில் 74 ரன்னில் அவுட்டானார். தன் பங்கிற்கு லபுசேன் (72) அரை சதம் விளாசினார். கேரி (11), மேக்ஸ்வெல் (5) ஏமாற்ற ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 352 ரன் எடுத்தது. கம்மின்ஸ் (19), ஸ்டார்க் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணியின் பும்ரா 3, குல்தீப் 2 விக்கெட் கைப்பற்றினர்.
கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித், வாஷிங்டன் சுந்தர் உடன் துவக்கம் தந்தார். விராட் கோஹ்லி அவுட்டான பின் அடுத்தடுத்து வந்த வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா 286 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 81 ரன்களும், விராட்ஹோக்லி 56 ரன்களும் எடுத்தனர் அதன் பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டம் இழந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement