சென்னை: வரும் அக்டோபர் 3-ம் தேதி, சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில், அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜகவுடன் கூட்டணி முறிவு: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவின் இந்த முடிவை கட்சியில் உள்ள பலரும் வரவேற்றனர்.
கூட்டணி கிடையாது: இருப்பினும், அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் இணைந்துவிடும் என்று திமுக உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தேசிய தலைமையில் இருந்து முயற்சித்ததாகவும், அதற்கு அதிமுக மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமி, பாஜகவுடன் இனி எந்த சூழ்நிலையிலும் கூட்டணி இல்லை என்றும், நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம்: இந்நிலையில், வரும் அக்டோபர் 3-ம் தேதி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணி முறிவு மற்றும் தேசிய தலைமையின் முயற்சி தோல்வியைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், உள்ளிட்டோரும், பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொள்வார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.