அதிமுக பொதுச் செயலாளராக முடி சூடிக் கொண்ட பிறகு, கட்சியை தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எடப்பாடி முடிவு எடுத்திருக்கிறார். அதற்காக இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என பிரிக்கப்பட இருப்பதாக… ‘ கலைத்து ஆடும் எடப்பாடி… கன்ட்ரோலுக்கு வருமா கட்சி?’ என்ற தலைப்பில் 10/09/2023 தேதியிட்ட இதழில் அட்டைப்பட கட்டுரையை வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, மாவட்ட செயலாளர்களை மாற்றி, கலைத்து ஆடியிருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அமைப்பு ரீதியாக 75 மாவட்டங்களை கொண்ட அ.தி.மு.க-வில் பல மாவட்டங்களில் பிரித்து புதியவர்களுக்கு மா.செ பொறுப்பு வழங்கி இருக்கிறார் எடப்பாடி. அதாவது, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் முதற்கட்டமாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல, ஓ.பி.எஸ் அணிக்கு தாவிய கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், திருச்சி மாநகர், பெரம்பலூர், தஞ்சாவூர் கிழக்கு மற்றும் மத்திய மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் இருந்த அரக்கோணம் ரவியின் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் ரவிக்கும், மேற்கு மாவட்டம் எஸ்.எம்.சுகுமாருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சுகுமார் இதற்கு முன்பாக மாவட்ட புரட்சித் தலைவி பேரவையின் பொருளாளராக இருந்தவர்.
திருவண்ணாமலை தெற்குக்கு அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியும், வடக்குக்கு தூசி மோகனும் மாவட்ட செயலாளராக இருந்தனர். திருவண்ணாமலை நான்காக பிரிக்கப்பட்டு, கிழக்கு, மத்திய, வடக்கு, தெற்காக என மாற்றி, 4 மாவட்ட செயலாளருக்கு தலா இரண்டு தொகுதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, கிழக்குக்கு முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், மத்திக்கு போளூர் தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த ஜெயசுதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தெற்கு, வடக்குக்கு அதே மா.செ.க்கள்தான் இருக்கின்றனர்.
அதேபோல, தஞ்சாவூர் நான்காக பிரிக்கப்பட்டு, கிழக்குக்கு பாரதிமோகன், மேற்குக்கு ரெத்தினசாமி, மத்திக்கு எம்.சேகர் (ஒரத்தநாடு பேரூராட்சி மன்றத் தலைவர்), தெற்கு மாவட்டத்துக்கு சி.வி.சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
அதேபோல தேனி மாவட்டம் தேனி கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டு, முருக்கோடை ராமர், ஜக்கையன் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல, திருநெல்வேலி மாவட்ட செயலாளராக இருந்த தச்சை கணேசராஜாவின் பவர் குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி திருநெல்வேலி மாநகருக்கு தச்சை கணேசராஜாவும், புறநகருக்கு இசக்கி சுப்பையாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைப்பு செயலாளராக இருக்கும் தளவாய் சுந்தரத்துக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சி மாநகருக்கு சினிவாசன், பெரம்பலூருக்கு இளம்பை தமிழ்ச்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அதேபோல, கும்பகோணம் மாநகரச் செயலாளராக ராமநாதனும், தஞ்சாவூர் மாநகர செயலாளராக சரவணன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, சென்னை, கோவை, திருச்சி, மதுரை என நான்கு மண்டலங்களாக செயல்பட்டு வந்த அதிமுக ஐடி விங் மொத்தமாக ஒரு குடையின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, ஐடி செயலாளாரக ராஜ் சத்யன், தலைவராக சிங்கை. ராமசந்திரன், இணை செயலாளராக கோவை சத்யன், பா.ஜ.க-வில் இருந்து வந்த நிர்மல் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து எடப்பாடிக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். “அ.தி.மு.க-வில் தற்போது அமைப்பு ரீதியாக 75 மாவட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அம்மா மறைவின்போது கட்சியில் இருந்தது 60-க்கும் குறைவான மாவட்டங்கள்தான். எடப்பாடி பழனிசாமி கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளராக ஆனாபோதே, அதிகாரத்தை பகிர்ந்தளிக்க முனைப்பு காட்டினார். ஆனால், 2018 வாக்கில், கட்சியில் ஓ.பி.எஸ் தரப்பின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால், அமைப்பு ரீதியாக பெரியளவில் மாற்றங்கள் செய்ய முடியவில்லை.
2020 வாக்கில் கட்சியின் 80 சதவிகித ஆதிக்கம் செலுத்தும் இடத்துக்கு எடப்பாடி வந்துவிட்டார். அதன்படிதான், 2020 ஜூலையில் ஆறு மற்றும் அதற்கும் மேற்பட்ட தொகுதிகளை கையில் வைத்திருந்த மா.செ.க்களின் அதிகாரம் பறிக்கப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கோவை, திருச்சி, நாகை, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் இரண்டு மூன்றாக பிரிக்கப்பட்டன. அதன்படி, ஒரு மா.செ.க்கு குறைந்தப்பட்சமாக மூன்று தொகுதிகளை கையில் கொடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, திருவள்ளூர், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மா.செ என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டன.
அதன்படிதான், தற்போது திருவண்ணாமலை, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. தற்போது அமைப்பு ரீதியாக அதிமுகவுக்கு 82 மாவட்டமாக உயர்ந்து இருக்கிறது. இவையெல்லாம் பெரிய அளவில் அதிருப்தியாகவில்லை. ஆனால், முன்னாள் அமைச்சர்களான வேலுமணி (கோவை புறநகர் தெற்கு மாவட்டம்), கள்ளக்குறிச்சி குமரகுரு, விழுப்புரம் சி.வி.சண்முகம், நாமக்கல் பி.தங்கமணி, தர்மபுரி கே.பி.அன்பழகன், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ராமநாதபுரம் முனியசாமி, சிவகங்கை செந்தில்நாதன் ஆகியோர் ஐந்து, ஆறு தொகுதிகளை கையில் வைத்து இருக்கிறார்கள்.
அவர்கள் தலையில் கைவைக்கும்போது மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, கூட்டணி தொடர்பாக தேவையில்லாமல் பேசியது, செயல்பாடு மூலமாக செல்லூர் ராஜூ மீது தலைமை மிக அதிருப்தியாக இருக்கிறது. எனவே அவரது மதுரை மாநகர் செயலாளர் பதவிக்கு டாக்டர் சரவணன் குறி வைத்து செயல்பட்டார். ஆனால், சரவணனுக்கு மருத்துவ அணியின் இணை செயலாளர் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இதனால், செல்லூர் ராஜூவின் தலை தற்சமயம் தப்பியிருக்கிறது. அதேபோலதான், ஓ.பி.எஸ் பக்கமிருக்கும் வைத்திலிங்கத்தை காலிசெய்ய தஞ்சாவூர் மாவட்டம் 4 மாவட்டமாகவும், 2 மாநகராகவும் பிரிக்கப்பட்டு இருக்கிறது.” என்றார் விளக்கமாக.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.