“எங்கள் பிள்ளைகளுக்கு இறுதி மரியாதை செய்ய உதவுங்கள்” – மணிப்பூர் மாணவர்களின் பெற்றோர் உருக்கம்

இம்பால்: உரிய கண்ணியத்துடன் எங்களின் குழந்தைகளுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய, அவர்கள் உடல்களின் பாகங்களைக் கண்டுபிடித்து உதவுங்கள்” என்று மணிப்பூரில் கடத்திக் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர், அரசுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மைத்தேயி இனத்தை சேர்ந்த 2 மாணவர்கள், குகி இனத்தை சேர்ந்தவர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் இம்பாலை சேர்ந்த பிஜாம் ஹேமன்ஜித் என்ற 20 வயது மாணவனும், ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி என்ற 17 வயது மாணவியும் கடந்த ஜூலை 6-ம் தேதி குகி இனத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், பிஜாம் ஹேமன்ஜித் மற்றும் ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி ஆகிய இருவரும் ஆயுதம் தாங்கிய கும்பலால் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களும், பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு சடலங்களாகக் கிடக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அவர்களின் உடல்கள் இதுவரை மீட்கப்படவில்லை. இந்த வழக்கை சிபிஐ தற்போது விசாரித்து வரும் நிலையில் தங்கள் குழந்தைகளின் மரணத்தில் உள்ள மர்மம் விலகி அவர்களின் உடல்கள் கிடைக்கும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் நம்புகின்றனர்.

ஈடு செய்ய முடியாத இழப்பு: கொல்லப்பட்ட 17 வயது மாணவியின் தந்தை ஹிஜாம் குலாஜித் கூறுகையில், “நாங்கள் எங்கள் குழந்தையை கடைசியாக ஒருமுறை பார்க்கவும் அவளுக்கு உரிய கண்ணியத்துடன் இறுதி மரியாதை செய்ய விரும்புகிறோம். எதுவும் இந்த இழப்பை ஈடுசெய்ய முடியாது. மைத்தேயி வழக்கப்படி, அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து விடைகொடுக்க குறைந்தபட்சம் அவர்கள் அணிந்திருந்த உடைகளின் பகுதிகளாவது தேவைப்படுகிறது. என் மகளின் பார்க்கும் போதெல்லாம் என் இதயம் முழுவதுமாக அமைதியிழந்து தவிக்கிறது. எங்கள் மகளின் புகைப்படத்தினை பார்த்ததில் இருந்து அவளது அம்மா நிம்மதியிழந்து படுத்தப் படுக்கையாகிவிட்டார்.

முதலில் நாங்கள் அவர்கள் இருவரும் ஒன்றாக சென்றுவிட்டதாக கருதினோம். ஆனால், பையனின் குடும்பத்தினை தொடர்பு கொண்டபோது அவர்கள் காணமால் போனது தெரியவந்தது. அவர்கள் இருவரும் ஏன் கொல்லப்பட வேண்டும் என்று எனக்கு புரியவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மகனின் வாசனையை உணர்கிறேன்: இதனிடையே, 20 வயது மாணவனின் குடும்பம் இந்தச் சூழ்நிலையை சரிவர கையாள முடியாமல் திணறி வருகிறது. மகனின் இழைப்பை அந்தக் குடும்பத்தால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அம்மாணவனின் தாயார் இன்றும் அவருக்கும் சேர்த்தே சமைக்கிறார். இன்றுடன் இரண்டரை மாதங்களாகின்றது. ஆனால் நான் இன்று வரை என்னுடைய மகனின் போர்வையைத் துவைக்கவில்லை. நான் இன்னும் அவனுடைய வாசனையை உணர்கிறேன்” என்கிறார் அந்தத் தாய்.

மைத்தேயி வழக்கப்படி, மாணவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யப்படும் வரை, இருவரின் தாயரும் தினமும் தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களுக்கு முன்பு தினமும் பத்தி, மெழுகுவர்த்தி ஏற்றி, சிறிதளவு உணவினை அவர்களுக்கு படைத்து வருகின்றனர்.

மாணவர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருவதால், மாணவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணம் தெரியவந்து அவர்களின் உடல்கள் கிடைக்கும் என்று இரண்டு குடும்பத்தினரும் நம்புகின்றனர். சிபிஐயின் சிறப்பு இயக்குனர் அஜய் பாட்நாகர் தலைமையிலான குழு புதன்கிழமை மணிப்பூருக்கு வந்து இந்த குற்றம் குறித்த விசாரணையைத் தொங்கியுள்ளனர்.

மணிப்பூரில் இணைய சேவை முடக்கம் ரத்து செய்யப்பட்ட உடன் வெளியான, இரண்டு மாணவர்களின் சடலங்களைக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அங்கு புதிய வன்முறைப் போராட்டங்கள் வெடித்துள்ளன. புதன்கிழமை இரவு உரிபோக், யயிஸ்குல், சங்கோபந்த் மற்றும் டிரா பகுதிகளில் போராட்டக்கார்கள் பாதுகாப்பு படை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்புப்படை வீரர்கள் பலசுற்றுக்கள் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர். முன்னதாக, செவ்வாய்க்கிழமை இரவு தலைநகர் இம்பாலில் போராட்டம் மூண்டது. இதனைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் போராட்டக்காரர்கள் 45 பேர் காயமடைந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் ஆவர்.

மணிப்பூரில் நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் (AFSPA) மாநிலம் முழுவதையும் ‘கலவரப் பகுதி’ (disturbed area) ஆக அம்மாநில அரசு அறிவித்தது. தலைநகர் இம்பால் உள்ளிட்ட 19 காவல் நிலையங்கள் உள்ள பகுதிகளைத் தவிர மாநிலம் முழுவதும் அக்.1ம் தேதி முதல் இந்நிலை 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.