என் உயிர்த் தோழன்: `புதுப்பேட்டை' படத்தின் முன்னோடி; பாபுவின் நினைவுகளைக் கிளப்பும் படம் ஒரு பார்வை!

நடிகர் பாபு சமீபத்தில் மறைந்தார். பாரதிராஜாவால் ‘என் உயிர்த் தோழன்’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு திறமையான நடிகரின் அடையாளத்தை முதல் படத்திலேயே நிரூபித்தவர் பாபு.

பிறகு சில படங்களில் தொடர்ந்து நடித்தவர், ஒரு படப்பிடிப்பின் ஸ்டண்ட் காட்சியில் மேலிருந்து குதிக்கும் போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். தொடர்ந்து 30 வருடங்களாகப் படுத்தப் படுக்கையாக இருந்த பாபு, சமீபத்தில் மரணம் அடைந்தது துரதிர்ஷ்டவசமானது. நடிப்புத்துறையில் பிரகாசிக்கத் துவங்கிய ஒரு துளிர், ஆரம்பத்திலேயே முடங்கி கருகிப் போனதைப் பெரும் சோகம் என்றுதான் சொல்ல வேண்டும். பாபுவின் நினைவாக அவர் அறிமுகமான திரைப்படத்தைப் பற்றி இந்த வார ‘டெண்ட் கொட்டாய்’ தொடரில் பார்க்கலாம்.

என் உயிர்த் தோழன்

அதுவரை தெற்கத்திய கிராமத்துத் தெருக்களில் சுகமாக பயணித்துக் கொண்டிருந்த பாரதிராஜா, முதன்முறையாக சென்னையின் குப்பத்தை நோக்கி கேமராவைத் திருப்பிய படமான ‘என் உயிர்த் தோழன்’ 1990-ல் வெளியானது. தமிழில் வெளிவந்த அரசியல் திரைப்படங்களில் முக்கியமானது இது. செல்வராகவன் இயக்கிய ‘புதுப்பேட்டை’ போன்ற திரைப்படங்களின் ஒருவகையான முன்னோடி இது எனலாம்.

‘தலீவா… உடல் மண்ணுக்கு… உயிர் உனக்கு’ என்று ஓர் அரசியல் தலைவரை முட்டாள்தனமான விசுவாசத்துடன் நம்பி பின்தொடரும் அப்பாவியான அரசியல் தொண்டனைப் பற்றிய திரைப்படம் இது. மக்களைக் காக்க வந்த அவதாரமாகப் பொதுவில் தங்களைக் காட்டிக் கொள்ளும் தலைவர்கள், இன்னொரு பக்கம் மக்களின் அறியாமையையும் நம்பிக்கையையும் எப்படியெல்லாம் சுரண்டிக் கொள்கிறார்கள் என்பதை துணிச்சலாக வெளிப்படுத்திய படமும் கூட. இந்த ஆதாரமான விஷயத்தை படம் சிறப்பாகப் பதிவு செய்திருந்தாலும் ஒட்டு மொத்த நோக்கில் சுவாரசியமாக இருந்ததா? இருந்திருந்தால் படம் வணிகரீதியான வெற்றியை அடைந்திருக்குமே?!

என் உயிர்த் தோழன்

குயிலு குப்பமும் விசுவாச அரசியல் தொண்டன் தருமனும்

சென்னையில் உள்ள பல சேரிகளில் ஒன்று ‘குயிலு குப்பம்’. அங்கிருக்கும் குடிசைகளில் ஒண்டியிருக்கும் ஜனங்களில் ஒருவன் தருமன். ரிக்ஷா ஒட்டுவதில் பிழைப்பு நடக்கிறது. பிறந்தவுடன் கார்ப்பரேஷன் கக்கூஸில் போடப்பட்ட தருமனை தூக்கி பாசத்துடன் வளர்த்து வருகிறார் ஒரு அக்கா. காலையில் தூங்கி எழுந்திருக்கும் போது தலைமாட்டில் டீயும் பன்னும் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதைத் தவிர தருமனுக்கு வேறு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. அந்தப் பகுதியின் மக்கள் நலனுக்காக களத்தில் இறங்கி வேலை செய்பவன். அதனாலேயே அவர்களின் பிரியத்தையும் செல்வாக்கையும் வளர்த்து வைத்திருப்பவன்.

ஆனால் தருமனுக்கும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. அது அவன் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியையும் தலைவனையும் கண்மூடித்தனமான விசுவாசத்துடன் நம்புவது. கடன் வாங்கியாவது கட்சிக்க்ச் செலவு செய்வது. நேரம் காலம் பார்க்காமல் இறங்கி வேலை செய்வது போன்றவற்றை உற்சாகத்துடன் செய்வது தருமனின் பழக்கம்.  சுயலாபத்திற்காக அரசியலில் இறங்கும் பெரிய மனிதர்களுக்கு இடையில் ‘கட்சி அலுவலகமே கோவில், கட்சித் தலைவனே தெய்வம்’ என்று மனதார நம்பும் அப்பாவியான தொண்டர்களின் நடுவில் முரட்டுத் தொண்டனாக இருப்பவன் தருமன்.

என் உயிர்த் தோழன்

அந்தச் சேரிக்குள் இறக்கை ஒடிந்த கிராமத்துப் பறவையாக வந்து சேர்கிறாள், இளம் பெண் சிட்டு. துயரமான முகத்துடன் உறைந்திருக்கும் அவள் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்வதில்லை. பாலியல் தரகர்கள் அவளைக் கைப்பற்ற முயல சிட்டுவைக் காப்பாற்றி அடைக்கலம் தருகிறான் தருமன். சிட்டுவின் பின்னணி மெல்ல தெரிய வருகிறது. விளாத்திகுளம் என்கிற ஊரைச் சேர்ந்தவள். அந்த ஊருக்கு நாடகம் போட வரும் குழுவில் நாயகனாக நடிக்கும் இளைஞன், நிஜத்திலும் ஹீரோ போல் நடித்து சிட்டுவின் மனதில் இடம் பிடிக்கிறான். அவனை நம்பி நகைளை அணிந்து வீட்டை விட்டு வந்து விடுகிறாள். நகைகளை அபகரித்துக் கொண்டு தப்பித்து ஓடி விடுகிறான் நடிகன். வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் நகரத்தின் நடுவீதியில் வந்து பரிதாபமாக நிற்கிறாள்.

சிட்டுவிற்கும் தருமனுக்கும் இடையில் தன்னிச்சையான காதல் மலர்கிறது. தருமனின் நல்லியல்புகளைப் பார்த்து தானே முன்வந்து ஒப்படைத்துக் கொள்கிறாள் சிட்டு. தன்னுடைய கணவன் முரட்டுத்தனமான அரசியல் அடிமையாக இருப்பது மட்டும் சிட்டுவிற்கு நெருடலை ஏற்படுத்துகிறது. மற்றபடி நல்ல கணவன். ஆரம்பிக்கும் இவர்களின் வசந்த வாழ்க்கையில் ஒரு புயல் குறுக்கிடுகிறது. நகைகளைத் திருடிச் சென்ற நடிகன், சினிமாத்துறையில் சற்று வளர்ந்து மந்திரியாகும் ஆசையில் அரசியலுக்குள்ளும் அடியெடுத்து வருகிறான். குயிலு குப்பத்தின் வேட்பாளன் ஆகிறான்.

என் உயிர்த் தோழன்

கட்சி எவரை நிறுத்தினாலும் அவரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்கிற முரட்டு விசுவாசத்தைக் கொண்டிருக்கும் தருமன், ஆரத்தி எடுப்பதற்காக நடிகனை வீட்டுக்கு அழைத்து வருகிறான். தன்னை ஏமாற்றியவனை நேருக்கு நேராகப் பார்க்கும் சிட்டு அதிர்ச்சியடைகிறாள். பிறகு மெல்ல தன் கணவனிடம் அந்த அயோக்கியனைப் பற்றி கூறுகிறாள். கட்சிக்காக வேலை செய்வதா, வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருக்கும் தருமனை, தலைவரே அழைத்து உபதேசம் செய்கிறார். ‘தலீவர்’ சொல்லி விட்டார் என்பதற்காக உற்சாகமாகக் களத்தில் இறங்குகிறான், தருமன். இந்தத் தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே தருமனைப் பலி போட முடிவு செய்கிறது தலைமை. இதன் மூலம் அனுதாப ஓட்டுக்களை அள்ளிவிடலாம் என்பது தலைவரின் மறைமுகத் திட்டம்.

பிறகு என்னவானது? உணர்ச்சிகரமான அந்த கிளைமாக்ஸை படம் பார்த்துதான் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

அறிமுகப்படத்திலேயே அசத்திய பாபு

தருமனாக பாபு. அளவெடுத்து தைக்கப்பட்ட சட்டை மாதிரி இந்தப் பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். ‘இன்னா யக்கா நீயி… இன்னாம்மே இது… எதிர்க்கச்சிக்காரர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்’ என்று சென்னை வழக்கில் ரகளையாகப் பேசி நடித்திருக்கிறார். மெல்லிய தேகம், வெள்ளந்தியான முகம்… என்று பாபுவின் தோற்றம் ஓர் அப்பாவி அரசியல் தொண்டனோடு சரியாகப் பொருந்தியிருக்கிறது. பல இடங்களில் இயல்பான நடிப்பும் வந்திருக்கிறது.

இளையராஜா, பாரதிராஜா

சிட்டுவாக ரமா. இவரும் இந்தப் படத்தில்தான் அறிமுகம். ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த ரமா, பாரதிராஜாவின் கண்ணில்பட அடுத்த கணமே நாயகி. இந்த ஒரு படத்தோடு காணாமல் போனவர், நெடுங்காலம் கழித்து ‘மெட்ராஸ்’ படத்தில் அம்மா கேரக்ட்டராக திரும்பி வந்தார். “என்னை ஏண்டா கூட்டுக்கினு வந்து இம்சை பண்றீங்க?” என்கிற மாதிரியே பல காட்சிகளில் சங்கடமாகத் தெரிகிறார். பூச்சாண்டியைக் கண்ட சிறுவன் மாதிரி எப்போதும் ஒரு பயந்த பாவம். ‘அவார்டு’ படத்தில் நடிப்பதற்குப் பொருத்தமான சோக ராகத்தை படம் முழுவதும் பாடுகிறார். பாதி முகம், கண்ணின் க்ளோசப், உக்கிரமான முறைப்பு என்று கேமரா மாய்மாலங்களை வைத்து எப்படியோ ரமாவை ஒப்பேற்றியிருக்கிறார் பாரதிராஜா.

வடிவுக்கரசியின் அட்டகாசமான நடிப்பு வெளிப்பட்ட படங்களில் ஒன்றாக இதைச் சொல்ல வேண்டும். ‘டேய் தருமா…’ என்று இழுவையுடன் அவர் கூப்பிடும் போது அச்சு அசலாக சென்னையின் வாசம் மணக்கிறது. ‘யாரோ ஒரு பொண்ணு வந்து குந்திக்கினுது’ என்று குப்பத்து ஜனங்கள் சொல்ல, ‘யாருடி அது… ஒத்து.. சொல்றேன்…’ என்று கூந்தலைப் பின்னிக் கொண்டே கூட்டத்தை விலக்கிச் செல்லும் அந்த உடல்மொழி முதற்கொண்டு, சாராயத்தைக் கப்பென்று அடித்து தருமனைக் கண்டதும் பின்னால் கிளாஸை ஒளித்து வைத்துவிட்டு ஒப்பாரி வைப்பது வரை பல காட்சிகளில் வடிவுக்கரசியின் நடிப்பு அருமை. (சூப்பர் யக்கா!)

பாரதிராஜா

ரமேஷ் என்கிற பெயரில் அறிமுகமானாலும் பாத்திரப்பெயரான ‘தென்னவன்’ என்பதே இவருக்கு நிலைத்து விட்டது. நாடக நடிகராக செந்தமிழ் வசனம் பேசும் காட்சிகளில் (குரல்: பாரதிராஜா) ‘யப்பா முடியலைடா சாமி’ என்று சலிப்பு வந்தாலும் அரசியல்வாதியாக மாறிய பிறகு சற்று நிலைக்கு வந்துவிடுகிறார். வாய்ஜாலத்துடன் பேசி பெண்களின் மனதைக் கவர்ந்து பிறகு அவர்களின் உடமையையும் கவரும் ஃபிராடு கேரக்ட்டர்.

‘டெல்லி பாபு’வாக லிவிங்ஸ்டன் செய்திருக்கும் அலப்பறைகள் சுவாரசியம். தந்திரங்கள் நிறைந்த ஒரு அரசியல் தரகனின் பாத்திரத்தை மெட்ராஸ் ஸ்லாங்குடன் பேசி அமர்க்களப்படுத்தி விட்டார். ஜாடிக்கேற்ற மூடியாக இவருடன் கூடவே நடித்திருக்கும் பெண்ணின் நடிப்பும் அருமை. மந்திரியைப் பார்க்கச் செல்லும் போது அந்தப் பெண்ணையும் அழைத்துச் சென்று “மந்திரி பக்கத்துல உக்காந்து பக்குவமா சொல்லு” என்று அனுப்பி வைப்பது முதல், தென்னவனைக் கவர்வது போல் அவருடைய முன்னாலேயே அந்தப் பெண் நடமாடும் போது தாழ்ந்த குரலில் திட்டி உள்ளே அனுப்புவது வரை டெல்லி பாபுவாக பல காட்சிகளில் அசத்திவிட்டார் லிவிங்ஸ்டன்.

தருமனின் கூடவே பயணிக்கும் பங்குவாக சார்லி. இறுதியில் குற்றவுணர்வில் தவிக்கும் காட்சியில் நன்றாக நடித்திருந்தார். ‘காமன்மேன்’ மாதிரி ‘சிட்டிஸன்’ என்கிற கிழவர் பாத்திரத்தையும் பாரதிராஜா உருவாக்கி வைத்திருந்தார். “சிட்டிசனுக்கு வாழறதுக்கு உரிமையில்ல. சாகறதுக்குத்தான் உரிமையிருக்கு” என்பது போன்ற ‘சுளீர்’ வசனங்களில் அரசியல் காரம் கணிசமாகவே இருந்தது.

Kadhal Padikattugal – Bharatiraja

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சேர்ந்த கூட்டணி

பாரதிராஜா + இளையராஜா கூட்டணி என்பது எப்போதும் ஸ்பெஷல். இளம்வயது முதலே நண்பனாக இருக்கும் பாரதிக்காக பிரத்யேமான டியூன்களை தனது ஹார்மோனியத்தில் ராஜா வைத்திருப்பாரோ, என்னவோ. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இந்தக் கூட்டணியில் ஒரு தற்காலிக விரிசல் விழுந்தது. ‘கடலோரக் கவிதைகள்’ படத்திற்குப் பிறகு பாரதிராஜாவின் படங்களில் தேவேந்திரன், ஹம்சலேகா போன்ற இசைமைப்பாளர்கள் உள்ளே வந்தார்கள். அந்தப் பாடல்களும் இனிமைதான் என்றாலும் இந்தக் கூட்டணியில் இருக்கும் பிரத்யேகமான மேஜிக் அவற்றில் இல்லை.

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மறுபடியும் இந்தக் கூட்டணி இணைந்தது, ‘என் உயிர் தோழன்’ திரைப்படத்தில்தான். ‘ஏ.. ராசாத்தி…’ “குயிலு குப்பம்…’, போன்ற இனிமையான பாடல்களைத் தந்திருந்தார் ராஜா. ‘மச்சி மன்னாரு’ என்று சித்ராவுடன் இணைந்து ராஜா ரகளையாகப் பாடியிருந்த பாடல் படத்தில் ஏனோ இடம்பெறவில்லை. ‘தம்பி.. நீ நிமிர்ந்து பாருடா’ என்கிற டைட்டில் பாடலில் அரசியல் மீதான கிண்டல்கள் இருந்தன.  பாடல்களைப் போலவே பின்னணி இசையிலும் ராஜா அசத்தியிருந்தார். தென்னவன் கையில் வைத்திருக்கும் புல்லாங்குழல் வரும் போதெல்லாம் அதற்கேற்ப இனிமையான குழலிசையைத் தந்திருந்தார்.

என் உயிர்த் தோழன்

அரசியல் தலைவர்களின் அட்ராசிட்டிகள், தொண்டனின் அப்பாவித்தனங்கள் ஆகியவற்றை பல காட்சிகளில் பாரதிராஜா அற்புதமாகச் சித்திரித்திருந்தார். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தலைவனுக்காக தருமன் தீக்குளிப்பு போராட்டத்தில் இறங்கும் அதே சமயத்தில் தலைவர் சிறையினுள் மது உள்ளிட்ட பல வசதிகளுடன் இருப்பார். தருமன் தீக்குளிப்பதை போலீஸ் தடுத்துவிட்ட விஷயம் தலைவருக்கு வருத்தத்தைத்தான் தரும். “என்னய்யா என்னை கைது பண்ணியிருக்காங்க… எதுவும் பெருசா நடக்கலையே?” என்று மாவட்டத்தைக் கடிந்து கொள்வார்.

மோசமான அரசியல் தலைவர்களைத் துணிச்சலாக விமர்சித்த படம்

அரசியல் மேடைகளில் பேச்சாளர்கள் செய்யும் அபத்தமான செயல்கள் தொடர்பான காட்சிகளும் சரியாக வந்திருந்தன. “இந்தியாவிற்கு இரவில் சுதந்திரம் வந்ததாகச் சொன்னார்கள். எங்கள் தலைவர் அப்போது இருந்திருந்தால் பகலில் வாங்கித் தந்திருப்பார்” என்று தருமன் எதையோ உளற, கூட்டம் ஆவேசமாகக் கைத்தட்டும். இன்னொரு பேச்சாளர் “மாம்பழத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று தலைவர் சொன்ன ஆலோசனையை ஆளுங்கட்சி கண்டுகொள்ளவில்லை. இதையே அவர் சீனாவிலோ, ஜப்பானிலோ சொல்லியிருந்தால் உடனே செய்து முடித்திருப்பார்கள்” என்று சம்பந்தமில்லாமல் சொல்ல அதற்கும் கூட்டம் பரவசத்துடன் கைத்தட்டும். அடுக்குமொழி அலங்காரத்தில் எதைப் பேசினாலும் கூட்டத்திற்கு புல்லரித்து விடும் ‘மொழி அரசியல்’ பல இடங்களில் கிண்டல் செய்யப்பட்டிருந்தது.

என் உயிர்த் தோழன்

தருமன் வராமல் ‘குயிலு குப்பத்தின்’ வாக்குகள் கிடைக்காது என்பதால் தலைவரே தருமனைச் சந்திக்க விரும்புவார். இந்தக் காட்சி சிறப்பாகப் படமாக்கப்பட்டிருந்தது. தெய்வ சந்நிதானத்தில் நிற்கும் பக்தன் போல வெகு தொலைவில் நிற்கும் தருமன், தலைவர் சொல்வதையெல்லாம் கேட்டு கண்ணீர் சிந்துவான். கண்ணப்ப நாயனார் கதையையெல்லாம் அவிழ்த்து விடும் தலைவர் “அனைத்தையும் விட கட்சிதான் முக்கியம்” என்று தன் மொழித் திறமையைக் காட்டியதும் ‘தெய்வமே’ என்று தாள் பணிந்து கண்ணீர் சிந்துவான் தருமன். அடுத்த காட்சியில் இதைப் பற்றி தன் மனைவியிடம் தருமன் புல்லரிப்புடன் விளக்குவதும் சிறந்த காட்சி. சிட்டுவின் அமர்ந்திருக்கும் தோற்றத்திற்குச் சிறப்பாக லைட்டிங் செய்திருந்தார், ஒளிப்பதிவாளர் கண்ணன்.

என்னதான் படத்தின் மையம் அழுத்தமாகக் கடத்தப்பட்டிருந்தாலும் பாரதிராஜாவின் படங்களில் வழக்கமாக நிகழும் மேஜிக் இதில் இல்லை. ஒரு பயங்கர கூச்ச சுபாவி, பிக் பாஸ் வீட்டிற்குள் தனியாகச் சென்றதைப் போல சென்னையின் குப்பத்து குடிசைகளின் நடுவில் பாரதிராஜா நிறைய தடுமாறியிருக்கிறார். அதிலும் ஆவேசமான தொனியில் வைக்கப்பட்டிருக்கும் அந்தப் புரட்சிகரமான க்ளைமாக்ஸ், சீரியஸிற்குப் பதிலாகச் சிரிப்பை வரவழைக்கிறது. அரசியல்வாதிகளைக் கொன்றுவிட்டால் நாடு திருந்தி விடுமா? இப்படிச் சில பல குறைகள் இருந்தாலும் இது முக்கியமான படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

பாபு மற்றும் வடிவுக்கரசியின் சிறந்த நடிப்பு, இளையராஜாவின் இசை, பாரதிராஜாவின் காரசாரமான அரசியல் விமர்சனக் காட்சிகளின் இயக்கம் போன்ற காரணங்களுக்காக இன்றும் கூட ரசித்துப் பார்க்கும் அளவில் இருக்கிறான், ‘என் உயிர்த் தோழன்’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.