தினசரி பயன்பாட்டில் கூகுளின் பங்கு அளப்பரியது. எதைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினாலும் அதற்கு முக்கிய நுழைவு வாயிலாக இருப்பது இந்த கூகுள் தளம்தான்.
உலகம் முழுவதும் பலகோடி பயனர்களைக் கொண்டிருக்கும் கூகுள் நேற்று தனது 25- வது பிறந்த நாளைக் கொண்டாடியது. இந்நிலையில் இந்தியாவில் நிலநடுக்க எச்சரிக்கை சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்படும்போது மக்களுக்கு முன்னெச்சரிக்கை வழங்கும் சேவை பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இனி இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களும் நிலநடுக்கத்திற்கான எச்சரிக்கையைப் பெறலாம். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய நில அதிர்வு மையம் ஆகியவற்றுடன் இணைந்து கூகுள் இந்த வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மழை முன்னறிவிப்பு போன்று நிலநடுக்க முன்னறிவிப்பையும் பெற முடியும். நிலநடுக்கத்தின் தொடக்கத்தையே சென்சாா்கள் மூலம் கண்டறியும் வகையில் கூகுள் இதனை வடிவமைத்திருக்கிறது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி, அளவு போன்றவையும் கூகுள் சா்வா்கள் மதிப்பிடும். பல தொலைபேசிகள் ஒரே நேரத்தில் நிலநடுக்கம் போன்ற நடுக்கத்தை உணர்ந்தால், பூகம்பம் நிகழ்கிறது என்பதையும், அது எங்கே, எவ்வளவு வலிமையானது என்பதையும் கூகுளின் சர்வரால் கண்டுபிடிக்க முடியும்.
கூகுளின் சர்வர் அருகிலுள்ள பிற தொலைபேசிகளுக்கு எச்சரிக்கைகளை அனுப்புகிறது. மேலும் பூகம்பம் வந்தால் எப்படி தற்காத்து கொள்வது என்ற விழிப்புணர்வு எச்சரிக்கைகளும் இடம்பெற்றுள்ளது.