உதகை: நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால், மக்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
உதகை சேரிங்கிராஸில் பாதயாத்திரையை தொடங்கிய அவர், கமர்சியல் சாலை வழியாக அப்பர் பஜார், மெயின் பஜார், பேருந்து நிலையம், லோயர் பஜார் வழியாக ஏடிசி சுதந்திர திடலில் முடித்தார். அங்கு நடந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
இந்தியாவில் நடைபெற்ற ‘ஜி-20’மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்கு பாரத பிரதமர் வழங்கிய 6 பரிசுப் பொருட்களில் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூளும் இடம் பெற்றுள்ளது. இது தேயிலை விவசாயம் இந்தியாவின் ஓர் அடையாளம் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, உள்ளூர் மக்களின் பிரச்சினையை மக்களவையில் பேசாமல், இந்து தர்மம், சனாதனம், மணிப்பூர் கலவரம், வெளி மாநில, வெளி நாடுகளின் பிரச்சினைகளை மட்டும் பேசி வருகிறார். இதனால் நீலகிரி மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை.
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், தேயிலை விவசாயிகளின் பிரச்சினையை மட்டுமின்றி, நீலகிரி மாவட்டமக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம். வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக 400 எம்.பி-க்களோடு ஆட்சி அமைப்பார்.
மத்தியில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமையும்போது, தமிழகத்தின் 39 தொகுதிகளில் இருந்தும் பாஜக எம்பிக்களை அழைத்துச் செல்வது நம் கடமை. நீலகிரி மாவட்டத்தில் பிரதமரின் பசுமை வீடு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 11,232 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டு, 48 ஆயிரம் குடும்பங்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி மற்றும் பிரதமரின் மருத்துவக் காப்பீட்டு திட்டம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு மாற்றங்களை பாஜக செய்து கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். உதகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நீலகிரி மாவட்டச் செயலாளர் டாக்டர் சுரேஷ்பாபு, அதிமுக மருத்துவர் அணி நிர்வாகி கார்த்திகேயன் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.