இம்பால்,மணிப்பூரில் இரு மாணவர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கொலை குறித்த சி.பி.ஐ., விசாரணை நேற்று துவங்கியது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கடந்த மே மாதம் 3ம் தேதி, இட ஒதுக்கீடு தொடர்பாக, மெய்டி – கூகி பிரிவினரிடையே மோதல் வெடித்தது. இதில், 175க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
கடந்த நான்கு மாதங்களாக வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், படிப்படியாக இயல்புநிலை திரும்பியது. இந்நிலையில், கடந்த ஜூலையில் காணாமல் போன 17 வயதுடைய ஆண், பெண் என இரு மாணவர்கள் கொல்லப்பட்டு சடலமாக உள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது-.
இதையடுத்து, மாணவர்களை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் சக மாணவர்கள் நேற்று முன்தினம் கண்டன பேரணி நடத்தினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தும்போது ஏற்பட்ட தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இந்நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் கண்டன பேரணி நடத்திய மாணவர்கள் முதல்வர் பைரேன் சிங் வீட்டை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது மாணவர்கள் மீது போலீசார் மீண்டும் தடியடி நடத்தியதால் பதற்றம் அதிகரித்தது.
மாநில அரசின் பரிந்துரையை ஏற்று, இரு மாணவர்கள் கொல்லப்பட்டது குறித்த சி.பி.ஐ., விசாரணை நேற்று துவங்கியது.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு, மணிப்பூரில், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைநகர் இம்பால் உள்ளிட்ட 19 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ள பகுதிகளைத் தவிர மாநிலம் முழுதும் இந்த சட்டம் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
முதல்வரை நீக்க வேண்டும்!
கடந்த 147 நாட்களாக மணிப்பூர் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடிக்கு இன்னும் அங்கு செல்ல நேரம் கிடைக்கவில்லை. இந்த வன்முறையில் மாணவர்கள் குறிவைக்கப்பட்டிருக்கும் கொடூரமான படங்கள் வெளியாகி ஒட்டுமொத்த தேசத்தையும் மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்தச் சண்டையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக வன்முறை ஆயுதம் ஏந்தப்பட்டிருப்பது வெளிப்படையாக தெரிகிறது. பா.ஜ.,வின் திறமையற்ற மணிப்பூர் முதல்வரை பிரதமர் மோடி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸ் தலைவர்
இம்பாலில் சி.பி.ஐ., அதிகாரிகள்!
சிறப்பு இயக்குனர் அஜய் பட்நாகர் தலைமையிலான சி.பி.ஐ., அதிகாரிகள் குழு நேற்று இம்பால் சென்றனர். தொழில்நுட்ப கண்காணிப்பு நிபுணர்கள், தடய அறிவியல் ஆய்வகத்தின் நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய இந்தக் குழு இம்பாலில் விசாரணையைத் துவங்கினர். காணாமல் போன மாணவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தும் இந்தக் குழு, இருவரின் மொபைல் போன் தரவுகளை ஆய்வு செய்ய உள்ளது. மாணவர்களின் கொலை வழக்கு சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்திலேயே அதிகாரிகள் தங்கள் விசாரணையை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்