திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பேத்துப்பாறையில் ரூ.1.70 கோடியில் வீடு கட்டித் தருவதாக ஒப்பந்ததாரர் ஏமாற்றிவிட்டதாக நடிகர் பாபி சிம்ஹா கூறினார்.
கொடைக்கானலைச் சேர்ந்தவர் திரைப்பட நடிகர் பாபி சிம்ஹா. இவர் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை பகுதியில் ஒப்பந்ததாரர் ஜமீர் மூலம் வீடு கட்டி வருகிறார். இந்நிலையில், வீடு கட்டுவதில் ஒப்பந்ததாரருக்கும், பாபி சிம்ஹாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதனால், கட்டிடப் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக, இருவரும் மாறி மாறி கொடைக்கானல் போலீஸில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், கொடைக்கானல் வந்த பாபி சிம்ஹா கூறியது: ”வீடு கட்டுவதற்கு 1.30 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பிறகு கூடுதல் பணிகள் காரணமாக 1.70 கோடி ரூபாய் கொடுத்தேன். புது வீட்டை பார்க்க வந்தபோது, பணிகள் முடிவடையாமல் பாதியில் நிற்பது தெரியவந்தது. அப்போது, பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர் ஜமீரிடம் கூறினேன். அதற்கு, அவர் கூடுதலாக பணம் கேட்டார். ஏற்கெனவே செலவு செய்த பணத்துக்கான ரசீதுகளை கேட்டேன். அதன்பின், பல்வேறு காரணங்களை கூறி வீட்டின் கட்டிடப் பணிகளை பாதியில் நிறுத்திவிட்டார். வேறு ஒரு பொறியாளருடன் வீட்டை ஆய்வு செய்த போது தரமற்ற முறையில் கட்டியிருப்பது தெரிந்தது.
என்னிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வீடு கட்டி தருவதாக ஒப்பந்ததாரர் ஏமாற்றிவிட்டார். நான் விதிகளை மீறி கட்டிடம் கட்டுவதாக குற்றம்சாட்டுகின்றனர். ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் என்னை மிரட்டுகின்றனர். என்னிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளது. தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். என்னை ஏமாற்றியவர்கள் மீது நீதிமன்றம் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.