சென்னை : நாடு முழுதும் அக்., 1 முதல் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர் விடுமுறை காரணமாக, இன்று முதல் வாங்க மாட்டோம் என, வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர்.
செப்., 30க்குப் பின், 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகள் வாயிலாக 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இருப்பு வைத்துள்ளோர், வங்கிகளில் டிபாசிட் செய்து வருகின்றனர்.
காலக்கெடு நாளையுடன் முடிவதாலும், சனி, ஞாயிறு, காந்தி ஜெயந்தி என, தொடர் விடுமுறை வருகிறது. இதனால், 2,000 ரூபாய் நோட்டு களை வங்கிகளில் செலுத்த முடியாது என்பதால், இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கப் போவதில்லை என, வர்த்தகர்கள்
அறிவித்துள்ளனர்.
தமிழக பெட்ரோலிய விற்பனையாளர் சங்க தலைவர் கே.பி.முரளி கூறியதாவது: மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை வருகிறது. அந்த நாட்களில், 2000 ரூபாய் நோட்டை வாங்கினால், செவ்வாய் கிழமை அதை வங்கியில் செலுத்தும்போது வாங்க மறுப்பர்.
எனவே, நாளை முதல் பெட்ரோல் பங்க்குகளில், 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படாது. சென்னை ஹோட்டல்கள் சங்க தலைவர் ரவி கூறியதாவது:ஹோட்டலில் சாப்பிட வருபவர்கள், 500 ரூபாய் நோட்டை தான் அதிகம் எடுத்து வருகின்றனர்; 2,000 ரூபாய் நோட்டு பெரிதாக யாரும் எடுத்து வரவில்லை. ஹோட்டல்களில் ஜூலை முதலே, அந்த நோட்டை வாங்கவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகளை பயணியரிடம் இருந்து பெறக் கூடாது என, அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளோம். ‘நடத்துனர்கள் யாரேனும் 2000 ரூபாய் நோட்டு களை வாங்கினால், அவர்களே பொறுப்பேற்க வேண்டும்’ என்றனர்.
அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் கூறுகையில், ”ரிசர்வ் வங்கியின் காலக்கெடு முடிவதால், இன்று முதல், அனைத்து ஆம்னி பஸ்களிலும், 2000 ரூபாய் நோட்டை பயணியர் கொடுத்து, டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டாம்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்