'Keep Calm and Face the Devil!' – உண்மை முகத்தை காட்டிய ஆஸி; தோற்றுப்போன இந்தியா!

ராஜ்கோட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றது. கடந்த இரு போட்டிகளில் தோல்வியடைந்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் ஃபார்ம் குறித்து சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் எழுந்தன. உலக கோப்பைத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்தப் வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தனது ஃபார்மை மற்ற அணிகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 

Warner

‘Let’s face The Real Devil’ என்ற சவாலுடன்  இந்திய அணிக்கு எதிராக மேக்ஸ்வல் மற்றும் ஸ்டார்க் இருவரையும் பிளேயிங் லெவனில் கொண்டு வந்தது ஆஸி,. அதே போல இந்திய அணியும் விராட் கோலி மற்றும் பும்ராவைக் களமிறக்கியது. கடந்த போட்டியில் டாஸ் வென்று பௌலிங்கைத் தேர்வு செய்த சோதனை, தோல்வியில் முடிந்ததால் இந்த முறை பேட்டிங்கை தேர்வு செய்தது ஆஸ்திரேலிய அணி. அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கினர். பும்ரா மற்றும் சிராஜ் வீசிய இன்னிங்ஸின் முதல் 5 ஓவர்களிலேயே 44 ரன்கள் எடுத்து அசத்தியது, இந்த ஜோடி. இப்போட்டி பவுண்டரி, சிக்ஸர் என சற்றுநேரத்திலேயே டி20 போட்டியாக மாறிவிட்டது. எட்டு ஓவர்களுக்குள்ளாகவே 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்துவிட்டு அவுட்டானார் வார்னர். 56 ரன்கள் எடுத்த வார்னர், பிரசித் கிருஷ்ணா வீசிய ஓவரில் கே.எல்.ராகுலிடம் கொடுத்தார். அடுத்து வந்த ஸ்மித்தின் ஸ்டைலிஷான ஷாட்களைப் பார்க்கும் போதே உலகக் கோப்பையில் அவர் செய்யப் போகும் மேஜிக் நம் கண் எதிரே தோன்றிவிட்டது. 11 ஓவர்கள் முடிவில் ஆஸி., அணி 103 ரன்களை எடுத்திருந்தது. இதற்கிடையில், ரன் வேகம் கொஞ்சம் குறைந்துவிட்ட நிலையில், மார்ஷும் ஸ்மித்தும் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க பொறுமையுடன் விளையாடி வந்தனர்.

Marsh

இவர்கள் இருவருமே 28 ஓவர்களுக்கு ஸ்டான்ட் செய்ய, ரன்கள் எகிறியது. கட்டவிழ்த்து விடப்பட்ட காளைகளாக மிட்செல் மார்ஷ், ஸ்மித் இருவரும் மைதானத்தின் எல்லாப் பக்கமும் ஆடத் தொடங்கியிருந்தனர். இருவருமே செஞ்சுரியை  நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில், 28-வது ஓவரில் மிட்செல் மார்ஷ் ஆட்டமிழந்தார். 96 ரன்கள் எடுத்த போது குல்தீப் பௌலிங்கில் அவுட்டானர்.

கடந்த போட்டியில் இந்திய அணி எப்படியோ இந்தமுறை அதை அப்படியே ரீ-கிரியேட் செய்தது ஆஸி. 8 விக்கெட்டுகள் வரை தரமான பேட்ஸ்மேன்களை வைத்திருக்கும் ஆஸி., 400 எடுத்துவிடும் என்றே தோன்றியது. அடுத்து வந்த லாபுஷேன் பயணித்ததும் சிங்கப்பாதைதான். இதற்கிடையில், சிராஜ் வீசிய 32வது ஓவரில் ஸ்மித் எல்.பி.டபுள்யூ விக்கெட் ஆனார். கடந்த போட்டிகளில் இல்லாத உக்கிரத்தை ஆஸி பேட்ஸ்மேன்கள் இந்த ஆட்டத்தில் உருவாக்கியிருந்தனர். ‘இது தான் ஒரிஜினல் ஆஸி அணி’ என உலகக் கோப்பை அணிகளுக்கு சொன்னது போல் இருந்தது, இவர்களின் உக்கிரம். 33 ஓவர்கள் முடிவில் 244 ரன்கள் எடுத்தது ஆஸி., அணி. அடுத்து வந்த அலெக்ஸ் கேரி வெறும் 11 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பௌலிங்கில் சுதாரித்துக் கொண்ட இந்திய அணி, வாஷிங்டன் சுந்தரை அஸ்திரமாக அனுப்பியது. அடுத்து களத்திற்கு வந்த மேக்ஸ்வெல், 39-வது ஒவரில் பும்ரா பந்துவீச்சில் அவுட் ஆனார். ‘மேக்ஸ்வெல் மிரட்டப் போகிறார்!’ என்று நினைத்த போது, வெறும் 5 ரன்களோடு தனது விக்கெட்டை முடித்துக் கொண்டார். இதற்குப் பிறகு, அணியின் ரன் ரேட் குறைந்து விட லாபுஷேன் மட்டும் ரன் தேற்றிக் கொண்டிருந்தார்.

Kuldeep

கேமரூன் கிரீன் 9 ரன்கள் மட்டுமே எடுக்க, குல்தீப் ஒவரில் அவுட் ஆனார். கம்மின்ஸ் வந்தாலும் பெரிய ஷாட்கள் அடிக்க முடியவில்லை. அதுவரை இழுத்துப் பிடித்து வந்த லாபுஷேன், 49 வது ஓவரில் ஆட்டமிழந்தார். 72 ரன்கள் எடுத்த இவர், பும்ரா ஒவரில் புறப்பட்டு விட்டார். முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது, ஆஸ்திரேலியா. 

இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தது, இந்த மாதிரியான ஆட்டத்தைத்தான். ஓடிஐ, டி20 என எந்தப் போட்டியாக இருந்தாலும் சேஸிங் செய்ய அதிக ரன்கள் இருக்கும் போதுதான், ஆட்டத்தில் உயிர்ப்பு இருக்கும். 353 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கியது, ரோஹித்-வாஷிங்டன் ஓப்பனிங் ஜோடி. “நீ சிங்கிள் மட்டும் வச்சி, எனக்கு பேட்டிங் ஸ்ட்ரைக் கொடுத்துரு!” என வாஷிங்டன் சுந்தரிடம் சொல்லி அழைத்து வந்திருப்பார்கள் போல. ஸ்ட்ரைக் கிடைத்த போதெல்லாம்  பவுண்டரி, சிக்ஸர் பிரித்து உதறிவிட்டார் ரோஹித் ஷர்மா. முதல் பத்து ஓவர்களில் ரோஹித் ஷர்மா அரைசதம் அடிக்க 70 ரன்களைத் தொட்டது, இந்திய அணி. 30 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்த வாஷிங்டன் சுந்தர், மேக்ஸ்வெல் வீசிய 11வது ஓவரில் அவுட் ஆனார். பேட்டிங்கில் சொதப்பிய மேக்ஸ்வெல் பௌலிங்கில் மிரட்டி விட்டார். அதே போல பௌலிங்கில் சிறப்பாகச் செயல்பட்ட வாஷிங்டன் சுந்தரும் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. அடுத்து வந்த விராட், ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப் வைத்து தன்னுடைய ஆட்டத்தை ஆடிவந்தார். 

Rohit Sharma

கடிவாளமிட்ட குதிரைகளாக ரன் எடுப்பதிலேயே குறியாக இருந்த இந்த ஜோடி, 20 ஓவர்கள் வரை நீடித்தது. ரோஹித் ஷர்மா 81 ரன்கள் எடுத்திருந்த போது, 21வது ஓவரில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் வீசிய பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார், ரோஹித். அப்போது இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவரும் மேக்ஸ்வெல்லின் சூழல் சூறாவளியில் சிக்கி ஆட்டமிழந்தார். ஆனாலும், ஆட்டம் இந்திய அணிக்குச் சாதகமாகத்தான் இருந்தது. இதற்குப் பிறகு, அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஸ்டான்ட் செய்யத் தவறிவிட்டனர். மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா இருவரும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு முடிந்த அளவிற்கு நெருக்கடியை உருவாக்கினர். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் சிறிய பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினர். 32 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்திருந்தது, இந்திய அணி. இருவரும் ஓரளவு பெர்ஃபார்மென்ஸைக் கொடுக்க முயற்சி செய்தாலும் பெரிதாக கைகூடவில்லை. ஸ்டார்க் வீசிய 36வது ஓவரில், ராகுல் 26 ரன்களுடன் ஆட்டமிழந்து புறப்பட்டார்.

கருமேகங்கள் சூழ்ந்த இந்திய அணியை மீட்க சூரியனைப் போல சூர்யகுமார் வருவார் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி. ஒரேயொரு பவுண்டரி அடித்து, டாட்டா காட்டிவிட்டு சென்று விட்டார். 8 ரன்கள் எடுத்து ஹேசில்வுட் ஓவரில் அவுட் ஆனார், சூர்யகுமார் யாதவ். இதற்குப் பிறகு மொத்த ஆட்டமும் ஷ்ரேயாஸை நம்பியிருந்த நிலையில், மேக்ஸ்வெல்லின் 39வது ஓவரில் சிக்ஸர் ஒன்றை அடித்தார். ஆனால், அடுத்த பந்தே கிளீன் போல்ட். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 249. இதற்குப் பிறகு, இந்திய அணியின் பேட்டிங் பாயை விரித்து படுத்துவிட்டது. எவ்வளவோ முயற்சித்தும் எழுப்ப முடியவில்லை. ஜடேஜா மட்டும் 35 ரன்கள் எடுக்க மற்றவர்கள் ஒற்றைப் படையில் ரன் எடுத்திருந்தனர். இறுதியாக 49.4 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது, இந்திய அணி. 

Team India

இந்த தோல்விக்குக் காரணம் அணியின் பேட்டிங் என்றே சொல்லமுடியும். கடந்த போட்டியிலேயே தொடரைக் கைப்பற்றி விட்ட நிலையில், இந்தப் போட்டியை இந்திய அணி சோதனையாகவே கையாண்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஆசியக் கோப்பை தொடரிலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்ட போது, வங்கதேச அணிக்கு எதிராக மாறுபட்ட பிளேயிங் லெவனைத் தேர்வு செய்தது. அதே போல, இந்த ஆட்டத்தில் ஓப்பனிங்கில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பளித்திருக்கிறது. ஆனால், இந்த இரண்டு பரிசோதனையின் முடிவும் தோல்வி தான். உலகக் கோப்பையில் விளையாடும் முதல் போட்டி வரை பரிசோதனை செய்து “அதுதான்ல வர்கீசு!” என்கிறது, இந்திய அணி நிர்வாகம். உள்ளூரில் நடைபெற்றாலும், சரியான பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்தால் மட்டுமே உலகக் கோப்பையை கைப்பற்ற முடியும் என்பதை இத்தோல்வி வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. எதிரணியைக் குறைவாக எடைபோட்டு எடுக்கக்கூடிய சில முடிவுகளை நிச்சயம் தவிர்த்தால் மட்டுமே உலகக் கோப்பை கனவு சாத்தியப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.