உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரரான அஷ்வினும் சேர்க்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
அக்டோபர் 5-ம் தேதி தொடங்கவிருக்கும் உலகக்கோப்பைக்கான இந்திய அணி பல நாள்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்த அணியில் அஷ்வின் உட்பட எந்தத் தமிழக வீரருமே இடம்பிடித்திருக்கவில்லை. உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட அதே அணியோடுதான் இந்திய அணி ஆசியக்கோப்பையிலும் ஆடியிருந்தது. அப்படி ஆசியக்கோப்பையில் ஆடிய போது அதன் இறுதிப்போட்டிக்கு முன்பு அக்சர் படேல் காயமடைந்தார். உடனடியாக ஆசியக்கோப்பையிலிருந்தும் விலகினார். அவருக்குப் பதிலாக உடனடியாக தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரை ஆசியக்கோப்பைக்கான அணியில் எடுத்தார்கள். அவரும் ஆசியக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்தார்.
அக்சர் படேலுக்கு ஏற்பட்ட காயம் 7-8 நாள்களுக்குள் சரியாகிவிடும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலேயே அவர் களமிறங்கக்கூடும் என்றும் அனுமானிக்கப்பட்டது. ஆனாலும் உலகக்கோப்பை அணியிலும் அக்சர் இருந்ததால் இந்திய அணி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ஒருவேளை அக்சர் குணமடையவில்லை என்றால் என்ன செய்யலாம் என்கிற கேள்விக்கு விடையாக அஷ்வினையும் வாஷிங்டன் சுந்தரையும் ஆஸ்திரேலியா தொடருக்கான அணியில் எடுத்தது பிசிசிஐ.
இருவருமே இந்தத் தொடரின் போட்டிகளில் ஆடினர். அஷ்வின் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஓடிஐ-யில் வார்னர், லபுஷேன், இங்லிஸ் என மூன்று முக்கியமான வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார். மூன்றாவது போட்டியில் வாஷிங்டன் சுந்தரும் ப்ளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்தார்.
செப்டம்பர் 28-க்குள் ஒவ்வொரு அணியும் தங்களின் இறுதியான உலகக்கோப்பை அணியை அறிவித்தாக வேண்டும் என ஐ.சி.சி கெடு விதித்திருந்தது. எதிர்பார்த்தபடி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்குள் அக்சர் படேல் குணமடையவில்லை. அணியில் மாற்றம் செய்வதற்கான இறுதி தேதியும் வந்துவிட்டதால் ஏற்கெனவே தயாராக வைக்கப்பட்டிருந்த அஷ்வினை இப்போது உலகக்கோப்பைக்கான அணியில் சேர்த்திருக்கிறது இந்தியா.
அஷ்வின் 2011 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால், 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பைக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை. இந்தச் சமயத்தில் அஷ்வினை அப்படியே முழுமையாக டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட்டாகவே இந்தியா பார்த்து வந்தது.
இந்நிலையில் இப்போது உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்து கம்பேக் கொடுக்கவிருக்கிறார் அஷ்வின்!