கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பான வழக்கில் அக்டோபர் 3-ல் விசாரணைக்கு ஆஜராகுமாறு திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை எக்ஸ் வலைதளத்தில் (முன்பு ட்விட்டர்) பகிர்ந்து அபிஷேக் பானர்ஜி வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
கிராமங்களில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாநிலத்துக்கான நிலுவைத் தொகையை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக டெல்லியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்டோபர் 3-ல் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.
இந்த கண்டனப் பேரணியில் கலந்து கொள்வதை தடுப்பதற்காகவே அமலாக்கத் துறை அதே நாளில் (அக்.3) விசாரணைக்கு ஆஜராக கோரி எனக்கு சம்மன்அனுப்பியுள்ளது. இது, பாஜகவிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைஅம்பலப்படுத்தும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பங்கேற்பதை தடுக்கும் விதமாக அப்போதும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. அதனை பணிவுடன் ஏற்று விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கினேன். அதேபோன்று, தற்போதும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கண்டன பேரணி டெல்லியில் நடைபெறும் அதே நாளில் விசாரணைக்கு ஆஜராக கோரி உள்நோக்கத்துடன் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறையை கையில்வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை ஒடுக்கும்நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது இதன்மூலம் மற்றொருமுறை வெட்டவெளிச்சமாகியுள்ளது. எதிர்க்கட்சிகளைக் கண்டுபாஜகவுக்கு தற்போது அச்சம் அதிகரித்துள்ளது. இதனால், அவர்கள் குழப்பமான மனநிலையில் ஆழ்ந்துள்ளனர். இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.