டெக்ஸாஸ்: அமெரிக்காவின் வரலாற்றில் 1929 முதல் 1940 வரையிலான காலகட்டம் பொருளாதார பேரழுத்தக் காலகட்டம் என்று வரையறுக்கப்படுகிறது. இக்காலகட்டத்தில் அமெரிக்காவின் பொருளாதாரம் மிகப் பெரும் சரிவில் இருந்தது.
இக்காலகட்டத்தில் அச்சிடப்பட்ட 10 ஆயிரம் டாலர் நோட்டு தற்போது 4.8 லட்சம் டாலருக்கு (ரூ.4 கோடிக்கு) ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. 1920-களின் முற்பகுதியில் உச்சத்திலிருந்த அமெரிக்காவின் பொருளாதாரம் 1930-க்குப் பிறகு வீழ்ச்சி அடையத் தொடங்கியது.
பங்குசந்தை சரிவு: முதல் உலகப் போரின் தாக்கத்திலிருந்து விடுபடத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்வதைக் குறைத்தன. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் தடுமாற்றத்தை சந்திக்கத் தொடங்கின. இதைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. அமெரிக்காவில் அனைத்துத் துறைகளும் மிகப்பெரும் சரிவுக்கு உள்ளாகின. முதலீடு செய்ய பணம் இல்லாமல் நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்கள் வேலை இழந்தனர். வங்கிகள் திவாலாகின. அமெரிக்காவின் வரலாற்றில் மிக மோசமான காலகட்டமான இது பேரழுத்த காலகட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் அச்சிடப்பட்ட 10 ஆயிரம் டாலர் நோட்டை ஹெரிடேஜ் என்ற அமெரிக்க ஏல நிறுவனம் சமீபத்தில் ஏலம் விட்டது. அப்போது இந்த நோட்டு 4.8 லட்சம் டாலருக்கு (ரூ.4 கோடி) ஏலம் போனது. இந்த நோட்டு 1934-ம்ஆண்டு அச்சிடப்பட்டதாகும். இதில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் படம் இடம்பெற்றுள்ளது.
இந்த ஏலம் குறித்து ஹெரிடேஜ் நிறுவனத்தின் துணைத் தலைவர் டஸ்டின் ஜான்சன் கூறுகையில், “அதிக மதிப்பு கொண்ட பழமையான நோட்டுகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் பெரும் வரவேற்பு உண்டு. அதன் நீட்சியாகவே 90 ஆண்டுகளுக்கு முன்பு பேரழுத்த காலகட்டத்தில் அச்சிடப்பட்ட 10 ஆயிரம் டாலர் நோட்டு பெரும் தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.