சென்னை: “சுகாதாரத் துறையை கையில் வைத்துள்ள அமைச்சரின் மெத்தனப் போக்கு, அலட்சியத்தாலும், துறை பற்றிய புரிதல் இல்லாததாலும் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்து, உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில மாதங்களாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பருவம் தவறிய மழை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக குழந்தைகளும், பெரியவர்களும் டெங்கு போன்ற விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருவதாக செய்திகள் வருகின்றன.தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் சுமார் 4,300 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், உண்மையில் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும். டெங்கு உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் டைபாய்டு, சிக்குன் குனியா மலேரியா போன்ற நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருமல், சளி மற்றும் தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சலுடன் உடல் சோர்வு, கடுமையான உடல் வலி ஆகிய பாதிப்புகளுடன் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.
எனவே, தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் நடத்தியதைப் போன்று சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி, நோய்களைக் கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த திமுக அரசை 30.7.2023 அன்று அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டேன்.ஆனால், தொடர்ந்து டெங்கு பாதிப்பு அதிகரித்து, இதுவரை சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உண்மையிலேயே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று செய்திகள் தெரிய வருகின்றன.
மதுரையில், ஒரே நாளில் 7 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், மாவட்டம் முழுவதும் நாள்தோறும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிய வருகிறது.
கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் 11 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 45 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், சென்னை, திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விருதுநகர், தஞ்சாவூர், சேலம், ஈரோடு, கோவை போன்ற மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
அதிமுக அரசில், அரசு மருத்துவத் துறையுடன், உள்ளாட்சித் துறையும் இணைந்து, அரசு வளாகங்கள், வணிகக் கட்டடங்கள், தனியார் கட்டடங்கள், வீடுகள் போன்ற அனைத்துப் பகுதிகளுக்கும் முன்களப் பணியாளர்களை அனுப்பி மழைநீர் தேங்குவதையும், நகரப் பகுதிகளில் நீண்ட நாட்களாக அள்ளாத குப்பைகளில் மழைநீர் தேங்குவதையும் தடுத்தும், தேவையான மருந்துகளைத் தெளித்தும், டெங்கு பரவலுக்கு முக்கிய காரணமான டெங்கு கொசுக்கள் அதிக அளவுக்கு உற்பத்தியாவதைத் தடுத்தும், மேலும், டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் தீவிரமாக முன்னெடுப்பு செய்ததன் காரணமாக இதுபோன்ற பருவக் காய்ச்சல்கள் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டது.
இதேபோல், திமுக அரசில் மருத்துவத் துறையும், உள்ளாட்சித் துறையும் இணைந்து அனைத்துப் பகுதிகளுக்கும் நேரடியாக சுகாதாரப் பணியாளர்களை அனுப்பி முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எனது அறிக்கைகளிலும், பேட்டிகளிலும் வலியுறுத்தி இருந்தேன். கடந்த இரண்டு மாத காலங்களில் எத்தனை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன என்பதை மருத்துவ அமைச்சர்தான் மக்களிடம் விளக்க வேண்டும்.
சுகாதாரத் துறையை கையில் வைத்துள்ள அமைச்சரின் மெத்தனப் போக்காலும், அலட்சியப் போக்காலும், துறை பற்றிய புரிதல் இல்லாததாலும் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்து, உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இனியாவது திமுக அரசு விழித்துக்கொண்டு அப்பாவி மக்களின் உயிரைக் காக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும் என்று இந்த மக்கள் விரோத திமுக அரசை வலியுறுத்துவதோடு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கென்று தனிப் பிரிவு அமைத்து சிறப்புப் பணியாளர்களை பணியமர்த்திட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, நகராட்சி பகுதியில் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்த உத்தரவிட்டார். | அதன் விவரம்: திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு: மருத்துவ முகாம் நடத்த ஆட்சியர் உத்தரவு