மதுரை: ‘‘அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சார்பதிவாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை தெரிவித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், மதுரை பதிவு மாவட்டத்திற்குட்பட்ட சார்பதிவாளர்களின் பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: மதுரை வருவாய் மாவட்டத்திற்குட்பட்டு மதுரை வடக்கு, மதுரை தெற்கு என இரு பதிவு மாவட்டங்கள் உள்ளன. இந்த இரு பதிவு மாவட்டத்திற்குட்பட்டு மொத்தம் 26 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
பதிவுத்துறை என்பது பொதுமக்களின் சொத்து உள்ளிட்ட பல்வேறு விதமான ஆவணப் பதிவுகள் தொடர்பான சேவையாற்றுவதிலும், அதன் மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டக் கூடிய முக்கியத்துறையாக விளங்குகிறது. 2023-2024 நிதியாண்டில் மதுரை வடக்கு பதிவு மாவட்டத்திற்கு ரூ.478 கோடி மதிப்பீட்டிலும், மதுரை தெற்கு பதிவு மாவட்டத்திற்கு ரூ.571.25 கோடி மதிப்பீட்டிலும் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் இம்மாதம் வரை மதுரை வடக்கு பதிவு மாவட்டம் மூலம் ரூ.139.29 கோடி மதிப்பீட்டிலும், மதுரை தெற்கு பதிவு மாவட்டம் மூலம் ரூ.141.59 கோடி மதிப்பீட்டிலும் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
அலுவலர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை முழுமையாக அடையும் வகையில் பணியாற்றிட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களின் பணிகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. பதிவுக்கு வரும் பொதுமக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. சார்பதிவாளர்கள் பத்திரப்பதிவின் போது அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் பதிவுதாரர்கள் சொத்து மதிப்பினை பதிவு ஆவணங்களில் தவறாமல் தெரிவித்து அதற்குரிய முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்தை செலுத்தி ஆவணங்களைப் பதிவு செய்தவதை உறுதி செய்திட வேண்டும்.
இதில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சார்பதிவாளர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, துணை பதிவுத்துறை தலைவர் ஆர்.ரவீந்திரநாத் மற்றும் மதுரை வடக்கு, மதுரை தெற்கு பதிவு மாவட்டங்களைச் சார்ந்த சார்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.