சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் 10 நீதிமன்றங்கள் செயல்படுவதால், கூட்ட நெரிசல், இடநெருக்கடி, அடிப்படை வசதிகள் இல்லாத நிலை என பல்வேறு சிரமங்களை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின்கீழ் பெருநகர உரிமையியல் அமர்வு நீதிமன்றங்கள், சிறு வழக்குகளுக்கான நீதிமன்றங்கள், குடும்பநல நீதிமன்றங்கள், ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்றங்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள், சிபிஐ நீதிமன்றங்கள், மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயம், போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றங்கள், போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள், தொழிலாளர் நல தீர்ப்பாயம், மத்திய நிர்வாக தீர்ப்பாயம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு, சமரச இசைவு தீர்ப்பாயங்கள் என 100-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
உயர் நீதிமன்ற வளாகத்தில் நிலவும் நீதிமன்ற அறைகளுக்கான இடப் பற்றாக்குறையால் 5 விரைவு நீதிமன்றங்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் 3 சிறப்பு நீதிமன்றங்கள், ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் என 10 நீதிமன்றங்கள் தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் இயங்கி வருகின்றன.
8 தளங்களுடன் கூடிய சிங்காரவேலர் மாளிகையின் 4-வது தளத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், முதல் 2 தளங்களில் நீதிமன்றங்களும், மற்ற தளங்களில் இதர அரசு அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, தேசிய தகவல் மையத்தின் நிர்வாக அலுவலகம், ஆதார் நிரந்தர பதிவு மையம், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலகம், குண்டர் தடுப்பு சட்ட அறிவுரை குழுமம் என மற்ற அலுவலகங்களும் செயல்பட்டு வருவதால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் எந்நேரமும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
இதுதவிர, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களில் ஆஜராக வரும் அரசியல் கட்சி பிரமுகர்கள், தங்களது ஆதரவாளர்கள், தொண்டர்கள் என பரிவாரங்களோடு வருவதால், ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் கூட்டத்துடன், நீதிமன்றத்துக்கு வரும் கூட்டத்தையும் சேர்த்து கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறுகின்றனர். கூட்ட நெரிசல் ஒருபக்கம் என்றால், இடநெருக்கடி அதற்கு மேல். சாதாரண அரசு அலுவலகம் போல மிக குறுகலான அறைகளில் போதிய காற்றோட்டமின்றி, நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
இது மட்டுமின்றி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் சிலர், பொழுது போகாமல் அப்படியே காலாற நடந்து வந்து, சிறப்பு நீதிமன்றங்களுக்கு வெளியே நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர். இரைச்சல் ஒரேயடியாக அதிகரிப்பதால், நீதிபதிகள் பொறுமை இழப்பதையும், வேடிக்கை பார்க்கும் கூட்டத்தை விரட்ட நீதிமன்ற ஊழியர்கள் படாதபாடு படுவதையும் அடிக்கடி காண முடிகிறது.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறியதாவது: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் கே.பாலு: வழக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு, நீதிமன்றம் வருகிறோம் என்ற எண்ணமே இருப்பதில்லை. அரசு அலுவலகத்துக்கு வருவதுபோல வந்து செல்கின்றனர். முக்கிய பிரமுகர்கள் தொடர்பான வழக்குகள் என்றால், வழக்கறிஞர்கள் நிற்பதற்குகூட இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.
நெரிசலில் சிக்கி, வியர்க்க விறுவிறுக்க சோர்வுடன் வாதிட நேரிடுகிறது. ஏற்கெனவே அல்லிக்குளம் வளாகத்தில் செயல்பட்டுவந்த எழும்பூர் நீதிமன்றம் தற்போது புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. எனவே, இங்குள்ள சிறப்பு நீதிமன்றங்களை தற்காலிகமாக அல்லிக்குளம் வளாகத்துக்கு மாற்றினால் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்களுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்,
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வி.அனுஷா: சிங்காரவேலர் மாளிகையில் தற்போது செயல்படும் முக்கியமான நீதிமன்றங்களில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. இந்த நீதிமன்றங்களுக்கு வரும் வழக்கறிஞர்கள், மனுதாரர்களுக்கு தனியாக கழிப்பிட வசதி, பார்க்கிங் வசதிகள் இல்லை. லிஃப்ட் அவ்வப்போது இயங்குவதில்லை. இதனால் வயதானவர்கள் படியேறி செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். நீதிமன்றங்களுக்குள் மூச்சுத் திணறல் ஏற்படும் அளவுக்கு கூட்டம் கூடிவிடுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெளியே உள்ள நீதிமன்றங்களை மொத்தமாக 2 அடுக்குமாடி கட்டிடங்களுக்கு கொண்டு வரும் மெகா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவி்க்கப்பட்டு, பல மாதங்கள் ஆகிவிட்டன. அதற்காக பிராட்வே பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான பூர்வாங்க பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அந்த பணியை துரிதப்படுத்தினால் மட்டுமே இட நெருக்கடி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.