"இனிமேல் மத்த படத்துக்கும் மியூசிக் பண்ணலாம்ன்னு இருக்கேன்!" – விஜய் ஆண்டனியின் கம்பேக் பேட்டி

`தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் `ரத்தம்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்காக விஜய் ஆண்டனி விகடனுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து சிலவற்றைப் பின்வருமாறு பார்க்கலாம்.

இந்தத் திரைப்படத்திற்குத் தனது தோற்றம் குறித்தான கேள்விக்கு முதலில் பதிலளித்த விஜய் ஆண்டனி, “எல்லாமே டைரக்டரோட ஐடியாதான். எல்லா படத்துக்குப் பின்னாடியும் டைரக்டர்தான் இருப்பாங்க. ஒரு இயக்குநர் ஒரு கதைய முடிவு பண்ணுவாங்க, கதாபாத்திரங்களை வடிவமைப்பாங்க. அந்தக் கதாபாத்திரத்திற்கு ஒத்துப்போகிற மாதிரியான முகங்களைத் தேடுவாங்க. இந்தக் கதையோட கதாபாத்திரத்திற்கு இந்த நடிகர்கள் நடிச்சா நல்லாயிருக்கும்ன்னு டைரக்டர் யோசிப்பாரு. அதுக்காக வீட்ல ஹோம்வொர்க்லாம் பண்ணுவாரு. அடுத்ததாக ஷூட்டிங்கிற்கு வந்ததும் டைரக்டர் சொல்றத உள்வாங்கிட்டு நடிப்போம். இந்த மாதிரியான விஷயங்களுக்குக் காரணமானவர் இயக்குநர் அமுதன்தான். என் பார்வைல நடிப்புங்கிறது கம்ஃபோர்ட்டான வேலைதான்.

விஜய் ஆண்டனி

நான் எதுவும் பெருசா ஹோம்வொர்க்லாம் பண்ணல. அவர் சொல்றத நான் பண்றேன். ஷுட்டிங் முடிச்சதும் எடிட் பண்ணணும், எமோஷனுக்கு ஏத்த மாதிரி டப்பிங் பண்ணணும். நான் சீன்ல சில விஷயங்களை மிஸ் பண்ணியிருந்தாலும் டப்பிங்ல இந்த ஃபீலிங்ல பண்ணலாம்ன்னு சொல்லுவாரு. இது மாதிரி எல்லா வேலைகளுக்கும் இயக்குநர்தான் காரணம். நடிகர்களாகிய நாங்களெல்லாம் ட்யூனாகி இருப்போம். 10 வருஷத்துக்கு முன்னாடி ஷூட்டிங்ல 100 பேருக்கு முன்பு வசனங்கள் பேசுறதுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். எல்லோரும் நம்மள கவனிக்குறாங்கன்னு யோசிக்கும் போது ஒரு மாதிரி கூச்சமாக இருக்கும். இன்னைக்கு அப்படி இல்ல.

லைவ் கான்சர்ட்கள்ல 1000 பேர்கிட்ட இருக்காங்க. காலப்போக்குல அது பழக்கமாகிடும். அந்தச் சூழலுக்கேற்ற மாதிரி நாமளும் ட்யூன் ஆகிடுவோம். சிலர்லாம் ‘இந்த கதாபாத்திரத்துக்காக நான் மெத்தட் ஆக்டிங் (Method Acting) பண்ணி அந்தக் கதாபாத்திரமாக மாறிடுவேன்’னு சொல்லூங்க. ஆனா, நான் அப்படி இல்ல. இயக்குநர் அமுதன் சொல்றதத்தான் நான் பண்றேன். என்னோட தோற்றம் தனியாக உங்களுக்குத் தெரியுறதுக்கு முக்கிய காரணம் அமுதன் என் லுக்கை வடிவமைத்த விதம்தான். அவர் சொல்றதத்தான் நான் செஞ்சேன்!” என்றார்.

இதனைத் தொடர்ந்து ‘ரத்தம்’ திரைப்படத்தின் கதை குறித்தான கேள்விக்குப் பதிலளித்த அவர், “இந்தப் படத்தின் கதையை நான் கேட்கல. ஸ்க்ரிப்ட்டா படிச்சிட்டேன். செந்தமிழ்ல, நடைமுறைல இல்லாத விஷயத்தை, ரொம்ப கவித்துவமாக வச்சு அழுத்திக்காம கம்யூனிகேட் பண்றதுதான் ரைட்டிங். ஷூட்டிங்லையும் என்ன வேணும்ங்கிறதுல இயக்குநர் அமுதன் தெளிவா இருப்பாரு. இந்தப் படத்தோட கதைய நான் படிச்சுதான் ஓகே பண்ணேன். யாருமே கவனிக்காத நடைமுறைல இருக்குற விஷயத்தைத்தான் இந்தப் படத்துல சொல்லியிருக்காரு!” என்றார்.

Vijay Antony | விஜய் ஆண்டனி

மேலும், “லைவ் கான்சர்ட்க்குப் பிறகு தொடர்ந்து மியூசிக் பண்ணலாம்ன்னு இருக்கேன். மக்கள் இன்னும் நம்மள மனசுல வச்சிருக்காங்கன்னு நினைக்கும் போது ஆச்சர்யமாக இருக்கு. நான் நடிக்க வந்த பிறகு அதுல என்னை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை. நிறைய கத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்துச்சு. சினிமாங்கிறது நடிப்பு மட்டும் இல்ல. அதுல பல துறைகள் இருக்கு. இந்தப் பயணத்துல சில விஷயங்களைத் தியாகம் பண்ன வேண்டிய சூழல் இருக்கும். அதனால நான் மியூசிக்கைத் தியாகம் பண்ணிட்டேன்.

இப்போ நான் படங்கள் தயாரிக்க, அதை ரீலிஸ் பண்றதுக்கு கத்துக்கிட்டேன். இப்போ நான் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கேன். பின்னணி இசை இல்லாம, படத்துக்குப் பாடல்கள் மட்டும் பண்ணலாம்ன்னு இருக்கேன். பின்னணி இசைக்கு ரிலீஸைப் பொறுத்து எப்போ வேணாலும் வேலை வரும். அந்தச் சமயத்துல நான் ஷூட்டிங்ல இருந்தாலும் இருப்பேன். அதுனால இனிமேல் மத்த படத்துக்கு பாடல்கள்ல மட்டும் வேலைப் பார்க்கலாம்ன்னு இருக்கேன்” எனப் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.