இன்றே சேமிக்கத் தொடங்காவிட்டால், நாளை நம் நிலை..?

இன்னும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது, 2050-ம் ஆண்டில் நம் நாட்டில் உள்ள மக்களில் ஐந்து பேரில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பார் என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) வெளியிட்டிருக்கும் கணிப்பு நம்மை சற்று அதிர்ச்சி அடையச் செய்கிறது.

இந்தியாவில் முதியோர் குறித்து ஐ.நா வெளியிட்ட இந்த அறிக்கையானது, ‘‘2022 ஜூலை 1-ம் தேதிபடி, 14.9 கோடி முதியவர்கள் நம் நாட்டில் உள்ளனர். அதாவது, மொத்த மக்கள் தொகையில் முதியோர்கள் 10.5% உள்ளனர். இந்த எண்ணிக்கையானது 2036-ம் ஆண்டில் 22.7 கோடியாக அதிகரித்து, 15% பேர் முதியோர்களாக இருப்பார்கள். இந்த முதியோர்களின் எண்ணிக்கை 2050-ல் 20.8 சதவிகிதமாக உயர்ந்து, 34.7 கோடியாக இருப்பார்கள்’’ என்று கணித்திருக்கிறது.

இந்த நிலையை சிக்கலின்றி எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதை இன்றைக்கு 25 வயதில் இருக்கிற ஒவ்வொருவரும் இன்றே யோசிக்கத் தொடங்க வேண்டும். காரணம், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போல, நம் நாட்டில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் எதுவும் இல்லை. முதியோர்களுக்குத் தற்போது தரப்படும் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாயானது, 10, 20 ஆண்டுகளுக்குப் பிறகு 5,000 அல்லது 10,000 ரூபாயாக உயரலாமே தவிர, அந்தப் பணத்தை வைத்து நம் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட முடியாது. முன்பு, அரசு வேலைகளில் பென்ஷன் கிடைத்தது. இப்போது, அதுகூட இல்லை; அவ்வளவு ஏன், ரயில் டிக்கெட்டில் முதியோர்களுக்கு இருந்த சலுகைகூட நீக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், ‘‘முதுமைக் காலத்தில் மகனோ, மகளோ நம்மைப் பார்த்துக்கொள்வார்கள்’’ என்கிற எதிர்பார்ப்பு இனிவரும் காலத்தில் எந்தளவுக்கு நிறைவேறும் என்பது கேள்விக்குறிதான். மாறிவரும் வாழ்க்கை முறையில் அவர்களை முழுமையாக எதிர்பார்த்து நிற்பது உறவில் விரிசலையே ஏற்படுத்தும்.

ஆக, முதுமைக் காலத்தில் தங்களுக்கான பொருளாதாரத் தேவைகளைக் குறை இல்லாமல் நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமெனில், அதற்கான நடவடிக்கைகளைத் தாங்களே எடுத்தாக வேண்டும். இதற்கு, 60 வயதுக்குப் பிறகு தேவைப்படும் பணத்தை இன்றே திட்டமிட்டுச் சேர்க்கத் தொடங்குவது அவசியத்திலும் அவசியம். ‘இன்னும் 25 ஆண்டுகள் இருக்கிறதே…’ என்று தள்ளிப்போடும் ஒவ்வொரு நாளும் கூடுதல் கஷ்டத்துக்கே வழிவகுக்கும்! அதே சமயம், இந்தப் பிரச்னையைத் தனிநபர்கள் தொடர்பான பிரச்னை என நினைக்காமல், ஒரு சமூகப் பிரச்னையாக கருதி, இதற்கான தீர்வுகளை மத்திய, மாநில அரசாங்கம் அவசியம் எடுக்க வேண்டும்.

முதியவர்கள், நாடு மற்றும் குடும்பத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட வர்கள். உழைக்கிற காலத்தில் அவர்களின் சக்தியை உறிஞ்சி எடுத்துவிட்டு, வயோதிக காலத்தில் அவர்களை சரியாகக் கவனிக்காமல்விடுவது மிகப் பெரிய துரோகம். எனவே, முதியோர்கள் உடலளவிலும், மனதளவிலும் பெரிய குறை எதுவும் இல்லாமல் நிம்மதியாக வாழும் சூழலை அரசாங்கங்கள் ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்வது மட்டுமே சரியான செயலாக இருக்கும்!

– ஆசிரியர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.