லக்னோ: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் தொடங்கினார். இந்த பயணம் இந்த ஆண்டு ஜனவரி 30-ம் தேதி காஷ்மீரில் முடிந்தது.
மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ராகுல் காந்தி, 2-ம் கட்ட பாரத் ஜோடோ யாத்திரையை குஜராத்தில் இருந்து விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது. இந்த பயணத்தின்போது உ.பி.யில் 2 வாரங்களுக்கு யாத்திரை மேற்கொள்ள ராகுல் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, ராகுல் காந்தியின் முதன்மை ஆலோசகரும் ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரியுமான விஜய் மகாராஜன் சமீபத்தில் அயோத்திக்கு சென்றுள்ளார். அங்கு ராம்ஜென்மபூமி தலைமை பூஜாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸை மகாராஜன் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனவே, 2-ம் கட்ட நடை பயணத்தின் போது ராகுல் காந்தி அயோத்திக்கு சென்று ராமர் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு அம்மாநிலத்தில் யாத்திரையை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
பர்னிச்சர் சந்தைக்கு சென்றார்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியின் கீர்த்திநகரில் உள்ள பர்னிச்சர் சந்தைக்குநேற்று சென்றார். அங்கு மரச்சாமான்கள் உற்பத்தி செய்யும் கார்பென்டர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஒரு பட்டறையில் மரத்தை இழைக்கும் பணியில் ஈடுபட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆசாத்பூர் மண்டி பகுதிக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கிருந்த காய்கறி மற்றும் பழ வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். இதுபோல கடந்த சில தினங்களுக்கு முன்புஆனந்த் விஹார் ரயில் நிலையம்சென்ற அவர், அங்கு சுமை தூக்குவோருடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.