உலககோப்பை 2023: இந்திய அணியின் கேம்சேஞ்சர் இந்த 3 பேர் தான் – யுவராஜ்

கிரிக்கெட் திருவிழா உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இந்தியா முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இதில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது என்பதை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரங்களான யுவராஜ் சிங் உள்ளிட்டோர் இந்திய அணி குறித்தும், வீரர்களின் பங்கு குறித்தும் தங்களின் யூகங்களை வெளிப்படுத்தியுள்ளனர். 

ஆஸ்திரேலியாவை சாய்ந்த இந்தியா

இந்திய அணி ஆசிய கோப்பையை வென்ற புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. அதனையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் என பலம் வாய்ந்த அணியாகவும், வீரர்கள் அனைவரும் உட்சக்கட்ட பார்மில் இருப்பதாலும் கம்பீரமாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது. அதே தெம்புடன் இப்போது உலக கோப்பை போட்டியையும் இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது. 

பேட்டிங்கில் இந்திய அணி

பேட்டிங்கை பொறுத்தவரை டாப் ஆர்டரில் சுப்மான் கில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி நம்பிக்கை அளிக்கின்றனர். மிடில் ஆர்டரில் கே.எல்.ராகுல், சூர்யகுமார் ஆகியோர் தூண்களாக இருக்கிறார்கள். பின்வரிசையில் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் இருப்பதால் இந்திய அணியின் பேட்டிங் டாப் கிளாஸில் இருக்கிறது. பவுலிங்கிலும் பும்ரா, சிராஜ், ஷமி, அஸ்வின், குல்தீப் ஆகியோர் நம்பிக்கை கொடுக்கின்றனர். இருப்பினும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் யார்? என்ற கேள்விக்கு பதிலை பலரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். 

யுவராஜ் சிங் விளக்கம்

இதற்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரமான யுவராஜ் சிங் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் இந்திய அணியின் கேம் சேஞ்சர்களுக்கான பட்டியலில் 3 பேரை தேர்வு செய்திருக்கிறார். அதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. பும்ரா, சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தான் இந்திய அணியின் கேம் சேஞ்சர்கள் என யுவ்ராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் இந்திய அணிக்காக ஒரு சில ஓவர்களில் போட்டியை மாற்றிக் கொடுக்கக்கூடிய திறமைசாலிகள் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.